தேர்தல் பத்திர முழு விவரங்களையும் தேர்தல் ஆணையத்தில் வழங்கிவிட்டோம்: உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ பிரமாண பத்திரம் தாக்கல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் பாரதஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) நேற்று தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது.

தேர்தல் பத்திர தரவுகளை தாக்கல் செய்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ வங்கியின் தலைவர் தினேஷ் குமார் காரா நேற்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: தேர்தல் பத்திரத்தை வாங்குபவரின் பெயர், அதன் மதிப்பு மற்றும் பத்திரத்துக்கான பிரத்யேக எண், அதை பணமாக்கிய அரசியல் கட்சியின் பெயர், பணத்தை திரும்பபெற்ற அரசியல் கட்சிகளின் வங்கிக்கணக்கு எண்ணின் கடைசி 4 இலக்கங்கள் உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ சமர்ப்பித்துள்ளது.

அரசியல் கட்சிகளின் முழு வங்கிக் கணக்கு எண்கள், கேஒய்சிவிவரங்கள் ஆகியவை கணக்கின்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை. அதேபோல, தேர்தல் பத்திரங்களை வாங்கியவரின் கேஒய்சி விவரங்களும் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, எஸ்பிஐ வழங்கிய முழு விவரங்களையும் தேர்தல் ஆணையம் நேற்று மாலை தனது இணையதளத்தில் பதிவேற்றியது. அதில், தேர்தல் பத்திரங்கள் மூலம்ரொக்கம் பெற்ற கட்சிகள், பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள், தேர்தல் பத்திர எண், வங்கிவாரியான விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசின் இத்திட்டம் சட்ட விரோதமானது என்று கூறி தேர்தல் பத்திர விற்பனை நடைமுறையை உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி ரத்து செய்தது.

மேலும், தேர்தல் பத்திர நன்கொடை தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்க எஸ்பிஐ வங்கிக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், எஸ்பிஐவங்கி முழுமையான தகவல்களை வழங்காமல் இருந்தது. இதற்கு,உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில், தற்போது தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்துவிவரங்களும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in