

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்களை வழங்கிய நன்கொடையாளர் யார் என்பது தெரியாது என்று திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தெரிவித்துள்ளன.
தேர்தல் பத்திரம் மூலம் பெற்ற நன்கொடை விவரங்களை 2023-ம் ஆண்டு நவம்பரில் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் தேசிய,பிராந்திய கட்சிகள் சமர்ப்பித்தன.உச்ச நீதி மன்றத்தின் உத்தரவின்படி இந்த விவரங்கள் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. எனினும் தேர்தல் பத்திரங்களின் வரிசை எண்,வாங்கியவர்கள் யார், அவற்றை பெற்ற அரசியல் கட்சிகளின் பெயர்கள் போன்ற அனைத்து விவரங்களையும் வெளியிட உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி ரூ.1,397 கோடியை நன்கொடையாக பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் அந்த கட்சிக்கு யாரெல்லாம் நன்கொடை வழங்கினர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
கடந்த 2023-ம் ஆண்டு நவம்பரில் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் தேர்தல் பத்திரம் விவரங்களை சமர்ப்பித்தபோது தன்னிலை விளக்கமும் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள எங்கள் கட்சி அலுவலகத்தின் தபால் பெட்டியில் சீலிட்ட உறைகள் போடப்பட்டிருந்தன. அந்த உறைகளை திறந்து பார்த்தபோது தேர்தல் பத்திரங்கள் இருந்தன. அவற்றை யார் வாங்கினார்கள் என்பது எங்களுக்கு தெரியாது.
பாரத ஸ்டேட் வங்கிக்கு மட்டுமே முழு விவரங்கள் தெரியும்.தேர்தல் பத்திரங்களை வாங்கும் போது பான் எண், அடையாள சான்று, முகவரி சான்று உள்ளிட்ட ஆவணங்களை நன்கொடையாளர்கள் வழங்கியிருப்பார்கள். எனவே எங்களுக்கு நன்கொடை வழங்கியவர்கள் யார் என்ற விவரம் பாரத ஸ்டேட் வங்கிக்கு மட்டுமே தெரியும். இவ்வாறு திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
ஐக்கிய ஜனதா தளம்: பிஹாரின் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்துக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.24.4 கோடி நன்கொடை கிடைத்திருக்கிறது. இந்த கட்சிக்கு வழங்கப்பட்ட பெரும்பாலான தேர்தல் பத்திரங்கள் கொல்கத்தா, ஹைதராபாத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் இருந்து வாங்கப்பட்டு உள்ளன. சில தேர்தல் பத்திரங்கள் மட்டுமே பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் வாங்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள தன்னிலை விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி பாட்னாவில் உள்ள எங்களது கட்சி அலுவலகத்துக்கு சிலர் வந்தனர். அவர்கள் சீலிட்ட உறையை வழங்கிவிட்டு சென்றுவிட்டனர். அந்த உறையை திறந்து பார்த்தபோது ரூ.10 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் இருந்தன. அவற்றை வழங்கிய நன்கொடையாளர்கள் யார் என்பது எங்களுக்குத் தெரியாது. இவ்வாறு ஐக்கிய ஜனதா தளம் விளக்கம் அளித்துள்ளது.