பெங்களூரு வெடிப்புச் சம்பவம் முதல் மதுரையில் போதைப்பொருள் பறிமுதல் வரை செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 1, 2024

பெங்களூரு வெடிப்புச் சம்பவம் முதல் மதுரையில் போதைப்பொருள் பறிமுதல் வரை செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 1, 2024
Updated on
3 min read

பெங்களூரு ‘ராமேஸ்வரம் கஃபே’ வெடிப்புச் சம்பவம் - 9 பேர் காயம்: பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடித்தது குறைந்த தீவிரம் கொண்ட வெடிகுண்டு என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிப்படுத்தி உள்ளார்.

மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, “ராமேஸ்வரம் கஃபேவில் நிகழ்ந்தது குண்டுவெடிப்புதான். குறைந்த தீவிரம் கொண்ட வெடிகுண்டு வெடித்திருக்கிறது. வாடிக்கையாளர் ஒருவரின் பையில் இந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்துள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இது தெரிய வந்துள்ளது. இதை யார் வெடிக்கச் செய்தார்கள் என்பது தெரியவில்லை. சம்பவம் நடந்த இடத்துக்கு காவல் துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். நிலைமை குறித்து ஆய்வு செய்யுமாறு உள்துறை அமைச்சரை நான் கேட்டுக்கொண்டேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பெங்களூரு குண்டனஹல்லி பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி அளவில் பயங்கர வெடிப்புச் சத்தம் கேட்டது. சுற்றியிருந்தவர்கள் சென்று பார்த்தபோது உணவகத்தின் முகப்புப் பக்கம் சேதமடைந்ததோடு உள்ளே தீ பற்றி எரிந்து கொண்டிருந்ததது. உணவகத்தில் இருந்தவர்களில் 9 பேர் காயமடைந்தனர். அவர்கள் ப்ரூக்ஃபீல்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தொடக்கத்தில் தகவல் வெளியானது. உணவகத்தில் திடீரென ஏற்படும் வெடிப்பு அடங்கிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

‘இரட்டை எஞ்சின்’ ஆட்சி - கார்கே விமர்சனம்: “குஜராத்தில் கடந்த 3 நிதி ஆண்டுகளில் 2,500-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களில் சுமார் 500 பேர் மாணவர்கள். குஜராத் சட்டப்பேரவையில் வழங்கப்பட்ட சமீபத்திய புள்ளிவிவரம் இது. இந்தச் செய்தி மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னேற்றம், செழிப்பு என்று பெருமை பேசும் ஒரு மாநிலத்தில், குடிமக்கள் பலர் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பது மனசாட்சிக்கு விரோதமானது. நாட்டுக்கு ஏற்கெனவே பல அநியாயங்களை இழைத்துள்ள பாஜகவின் இரட்டை எஞ்சின் ஆட்சியின் தவறான நிர்வாகத்துக்கு இது மற்றுமொரு எடுத்துக்காட்டு” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கருத்து தெரிவித்துள்ளார்.

ரயிலில் ரூ.50 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - மதுரையில் சிக்கிய நபர்: மதுரையில் ஓடும் ரயிலில் ரூ.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிக்கிய நபருக்கு சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு தினமும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னையில் இருந்து பயணித்த ஒருவர், மதுரை ரயில் நிலையத்தில் வந்து இறங்கினார். அவரை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் விசாரித்த போது, அவர் சென்னை தேனாம்பேட்டை பகுதியிலுள்ள கண்ணதாசன் நகரிலுள்ள அபிராமி அவென்யூ பகுதியைச் சேர்ந்த பிள்ளமண்ட் பிரகாஷ் எனத் தெரியவந்தது.

அவரது இரண்டு பேக்கில் தலா 15 பொட்டலங்களாக போதைப்பொருட்கள் மற்றும் போதைப்பொருள் தயாரிக்க உதவும் ரசாயன பவுடர்கள் என சுமார் 30 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்து மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே,"தமிழகம் முழுமையாக இந்தியாவின் போதைப்பொருள் தலைநகரமாக மாறியிருக்கிறது. போதைப் பொருள் கடத்தல்காரர்களின் புகலிடமாக நமது மாநிலத்தை மாற்றியதற்காக மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

மார்ச் இறுதிக்குள் தொடங்கும் மதுரை ‘எய்ம்ஸ்’ பணிகள்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு, மத்திய மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதனால், மார்ச் மாதம் இறுதியில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளதாக எய்ம்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்,‘எம்.பி’ சு.வெங்கடேசன் கூறுகையில், “இந்தத் தகவல் உண்மைதான். ஆனால், மக்களவைத் தேர்தலை கணக்கில் கொண்டு மத்திய அரசு கடந்த 6 மாதத்திற்கு முன்பே மக்களவையில் மார்ச் மாதத்தில் கட்டுமானப்பணிகள் தொடங்கும் என்று கூறி வருகிறது” என்றார்.5

“நாங்கள் கெஞ்சவில்லை, திமிராக நடக்கவில்லை”: “நாங்கள் திமுகவுடன் தோழமையோடு இருக்கின்றோம். நாங்கள் கெஞ்சவும் வாய்ப்பில்லை, திமிராக நடக்கவும் வாய்ப்பில்லை. சமுகமாக இருக்கிறோம். தமிழகத்தை பொறுத்தவரை முதல்வர் ஸ்டாலின்தான் கூட்டணிக்கு தலைவர். அனைவரும் ஒன்று சேர்ந்து முடிவு செய்வோம்” என தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, “அதிமுக மீதான அச்சத்தால் திமுக அவசர அவசரமாக தொகுதி பங்கீட்டை முடிக்கிறது. இது ஒரு தோல்வி பயம்தான். எந்தெந்த கட்சிகள் எங்கு செல்லும் என்பது இன்னும் பத்து நாட்களில் தெரியவரும். அதுவரை இடைவேளை” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

245 சிவில் நீதிபதி பதவிக்கான தற்காலிக தேர்வு பட்டியல் ரத்து: தமிழகத்தில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கு தேர்வானவர்களின் தற்காலிக தேர்வு பட்டியலை ரத்து செய்த உயர் நீதிமன்றம், இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றி, புதிதாக திருத்தி அமைக்கப்பட்ட தேர்வு பட்டியலை 2 வாரத்தில் வெளியிட டிஎன்பிஎஸ்சிக்கு அறிவுறுத்தியுள்ளது.

பணிப்பெண் சித்ரவதை வழக்கில் நிபந்தனை ஜாமீன்: பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் என்று நிபந்தனையுடன் சென்னை உயர் நீதிமன்றம் இருவருக்கும் ஜாமீன் வழங்கியுள்ளது.

மகாராஷ்டிராவில் இறுதியாகும் கூட்டணி உடன்பாடு: மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநிலத்தில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் உத்தவ் தாக்கரேவின் கட்சி 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 18 தொகுதிகளிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் போட்டியிட முடிவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரபூர்வ ஒப்பந்தம் இன்னும் 2 நாட்களில் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

‘இண்டியா’ தலைவர்கள் மவுனம்!” - பிரதமர் மோடி சாடல்: சந்தேஷ்காலி விவகாரத்தால் நாடே கொந்தளிப்பு அடைந்துள்ளது என்று மேற்கு வங்க திரிணமூல் காங்கிரஸ் அரசை சாடிய பிரதமர் மோடி, “இந்த விவகாரத்தில் இண்டியா கூட்டணி தலைவர்கள் வாய்மூடி மவுனமாக உள்ளனர். மகாத்மா காந்தியின் குரங்குகளைப் போல கண், வாய், செவி மூடி அவர்கள் இருக்கிறார்கள்" என்று விமர்சித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் ஒரு வாரத்தில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு: எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in