Published : 01 Mar 2024 03:19 PM
Last Updated : 01 Mar 2024 03:19 PM

“நாங்கள் கெஞ்சவில்லை, திமிராக நடக்கவில்லை” - செல்வப்பெருந்தகை @ திமுக தொகுதிப் பங்கீடு

செல்வப்பெருந்தகை

சென்னை: “நாங்கள் திமுகவுடன் தோழமையோடு இருக்கின்றோம். நாங்கள் கெஞ்சவும் வாய்ப்பில்லை, திமிராக நடக்கவும் வாய்ப்பில்லை. சுமுகமாக இருக்கிறோம்” என தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி ஒன்றில், “காங்கிரஸ் கட்சியின் சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறோம். புதுமைப்பெண், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி போன்ற புதுமையான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்திருக்கிறார்.

காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கே தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை சந்திக்க வர இருக்கிறார். காங்கிரஸ் சார்பில் ஒரு மிகப் பெரிய மாநாடு நடத்தவிருக்கிறோம். அவர் அந்தப் பிரச்சாரத்துக்கு வரப்போகிறார்.

காங்கிரஸ் - திமுக கூட்டணி மிக வலிமையாக இருக்கின்ற ஒரு கூட்டணி. நான்கு தேர்தல்களில் வெற்றி கூட்டணியாக இருந்திருக்கிறோம். அதேபோன்று இந்தத் தேர்தலிலும் வெற்றி வாகை சூடவிருக்கிறோம். பேச்சுவார்த்தை சுமுகமாக இருக்கிறது. எந்தப் பிரச்சினையும் கிடையாது. வெகு விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம்.

நாங்கள் திமுகவுடன் தோழமையோடு இருக்கின்றோம். நாங்கள் கெஞ்சவும் வாய்ப்பில்லை, திமிராக நடக்கவும் வாய்ப்பில்லை. சமுகமாக இருக்கிறோம். தமிழகத்தை பொறுத்தவரை முதல்வர் ஸ்டாலின்தான் கூட்டணிக்கு தலைவர். அனைவரும் ஒன்று சேர்ந்து முடிவு செய்வோம்” என்றார்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் நேற்று செல்வப்பெருந்தகை கூறும்போது, “திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து கொண்டிருக்கிறது. பிரச்சினை ஏதுமில்லை. தோழமையோடு இருக்கிறோம். பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும். திமுக - காங்கிரஸ் உண்மையான தோழமையோடு இருக்கிறது. ராகுல் காந்தியும், ஸ்டாலினும் அண்ணன் தம்பிபோல் உள்ளனர்.

காங்கிரஸ் யாரிடமும் தொகுதிகளுக்காக கெஞ்சவில்லை. 138 ஆண்டுகளாக இந்தக் கட்சி எத்தனை தேர்தலை பார்த்திருக்கும். பேச்சுவார்த்தை நடத்தாததால் 2014-ல் தனியாக போட்டியிட்டோம். திமுகவிடம் எத்தனை இடங்களை பெறுவது என்பதை அகில இந்திய காங்கிரஸ் முடிவெடுக்கும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x