இமாச்சல பிரதேசம்: காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் 6 பேர் தகுதிநீக்கம்: சபாநாயகர் நடவடிக்கை

இமாச்சல பிரதேச சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா
இமாச்சல பிரதேச சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா
Updated on
1 min read

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு காங்கிரஸைச் சேர்ந்த 6 எம்எல்ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்த நிலையில் அவர்கள் அனைவரையும் தகுதிநீக்கம் செய்து, இனி அந்த 6 பேரும் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர முடியாது என சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா அறிவித்துள்ளார்.

அரசியல் குழப்பத்தை ஏற்படுத்திய தேர்தல்: 68 உறுப்பினர்களைக் கொண்டஇமாச்சல பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு 40 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 25 எம்எல்ஏக்களும் உள்ளனர். 3 பேர் சுயேச்சை எம்எல்ஏக்கள். நேற்று முன்தினம் நடந்த ஒரு மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு வாக்களித்ததால் சுயேச்சை ஆதரவுடன் பாஜக மாநிலங்களவை வேட்பாளர் வெற்றி பெற்றார். இதையடுத்து, அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், இமாச்சல சட்டப் பேரவையில் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு போதிய பெரும்பான்மை இல்லை. எனவே, சட்டப்பேரவையில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி எதிர்கட்சித் தலைவர் மற்றும்பாஜக எம்எல்ஏ.க்கள் நேற்று காலை ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லாவை சந்தித்து வலியுறுத்தினர்.

தொடர்ந்து, இமாச்சல முதல்வர் சுக்விந்தர் ராஜிநாமா செய்யப் போவதாக தகவல் வெளியான நிலையில் அது தவறான செய்தி என அவர் மறுப்பு தெரிவித்தார்.மேலும், காங்கிரஸ் அரசு இமாச்சலில் 5 ஆண்டு ஆட்சியை முழுவதுமாக நிறைவு செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இத்தகைய பரரப்புகளுக்கு மத்தியில், மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு காங்கிரஸைச் சேர்ந்த 6 எம்எல்ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்த குற்றத்துக்காக தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நேர்ந்தால் அதில் ஏற்படும் குழப்பங்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவே காங்கிரஸ் இந்த நட்வடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 6 பேர் விவரம்: ராஜீந்தர் ராணா, சுதீர் சர்மா, இந்தர் தத் லக்கன்பா, தெய்வேந்தர் குமார் பூட்டோ, ரவி தாக்கூர், சேத்தன்ய சர்மா ஆகியோர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in