Published : 21 Feb 2024 09:34 AM
Last Updated : 21 Feb 2024 09:34 AM

டெல்லி சலோ போராட்டம்: 14,000+ விவசாயிகள் தயார்: துணை ராணுவப் படை @ பஞ்சாப் எல்லை

பஞ்சாப் - ஹரியாணா ஷாம்பு எல்லையில் தயார் நிலையில் துணை ராணுவப் படை

புதுடெல்லி: மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரித்து டெல்லி நோக்கிச் செல்லும் போராட்டத்துக்கு விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். அவர்களை டெல்லி நோக்கி முன்னேறவிடாமல் தடுக்க காவல்துறையினரும் தயார்நிலையில் இருக்கின்றனர். வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளின்படி 23 வகையான பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும். இதை உறுதி செய்து சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13-ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரித்து டெல்லி நோக்கிச் செல்லும் போராட்டத்துக்கு விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். பஞ்சாப் - ஹரியாணாவை ஒட்டிய ஷாம்பு எல்லையில் 14 ஆயிரம் விவசாயிகள் தயார் நிலையில் உள்ளனர். 1200 டிராக்டர்கள், 300 கார்கள், 10 மினி பஸ்களில் விவசாயிகள் குவிந்துள்ளனர்.இதனை ஒட்டி பஞ்சாப், ஹரியாணா என டெல்லியை ஒட்டிய எல்லைகளில் போலீஸார், துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்தமுறை டெல்லியை நோக்கி விவசாயிகள் முன்னேற முயன்றபோது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இந்நிலையில் இந்தமுறை அதை எதிர்கொள்ளும் வகையில் விவசாயிகள் முகத்தில் கவசம் அணிந்து தயாராகி வருகின்றனர். சாக்குகளை தண்ணீரில் நனைத்து வைத்துள்ளனர். கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டால் அவற்றின் மீது போட்டு புகையை மட்டுப்படுத்த தயாராக உள்ளனர். மேலும் டிராக்டர்களையே தங்குமிடம் போல் தயார் செய்தும் வைத்துள்ளனர். எப்படியாவது டெல்லி நோக்கி முன்னேறிவிட வேண்டும் என்று அனைத்து முன்னேற்பாடுகளையும் அவர்கள் செய்து வருகின்றனர்.

தயார்நிலையில் துணை ராணுவம்.. விவசாயிகளின் முன்னேற்பாடுகள் ஒருபுறம் இருக்க காவல்துறையும், துணை ராணுவப்படையினரும் விவசாயிகள் டெல்லிக்குள் நுழையாத வண்ணம் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். டிக்ரி மற்றும் சிங்கு எல்லைகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பல அடுக்கு தடுப்பு வேலிகள் அமைத்துள்ளனர். கான்க்ரீட் தடுப்புகள், வாகனங்கள் முன்னேற இயலாத வண்ணம் இரும்பு ஆணிகள் பதிக்கப்பட்ட தடுப்புகள் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். காசிபூர் எல்லையில் 2 பாதைகள் மூடப்பட்டுள்ளன.

எங்கள் குற்றம்தான் என்ன? பஞ்சாப் கிஷான் மஸ்தூர் கமிட்டி தலைவர் சர்வான் சிங் பாந்தர் அளித்த பேட்டியில், “அரசாங்கம் எங்களை கொலைகூட செய்யட்டும். ஆனால் எங்களை அடக்குமுறைக்கு உள்ளாக்க வேண்டாம். குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை அறிவித்து பிரதமர் இந்தப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் வேண்டுகோள். விவசாயிகளை ஒடுக்கும் அரசாங்கத்தை தேசம் ஒருபோதும் மன்னிக்காது. ஹரியாணா கிராமங்களில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் செய்த குற்றம்தான் என்ன? உங்களை நாங்கள் பிரதமராக்கியதுதான் குற்றமா? எங்களை பாதுகாப்புப் படைகள் கட்டுப்படுத்தும் என்று நாங்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அரசியல் சாசனத்தை மதித்து நடங்கள். நாங்கள் அறவழியில் அமைதியாக டெல்லியை நோக்கி முன்னேற அனுமதியுங்கள். அது எங்களின் உரிமை” என்று தெரிவித்தார்.

எங்கள் இலக்கு அதுவல்ல... அதேபோல் விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் டலேவால் கூறுகையில், “எங்கள் இலக்கு அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது அல்ல. எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்த்து எங்களுக்குச் சாதகமாக முடிவு எடுக்க வேண்டும் என்றே வலியுறுத்துகிறோம். ஆனால் மட்திய அரசு எங்கள் கோரிக்கைகளை கண்டும்காணமால் கிடப்பில்போடும் உத்தியைக் கடைபிடிக்கிறது. எல்லையில் பல அடுக்கு தடுப்புவேலிகளை அமைத்து நாங்கள் டெல்லியை நோக்கி முன்னேறவிடாமல் தடுக்கிறது” என்று பாஜக அரசு மீது குற்றம் சுமத்தினார்.

இந்நிலையில், சாலை மார்க்கம் மட்டுமல்லாமல் ஆறு, கால்வாய் வழியாகக் கூட விவசாயிகள் முன்னேறிவிடக்கூடாது என்று காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. பஞ்சாப் காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த உத்தரவின் பேரில் கெடுபிடிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x