Published : 20 Feb 2024 12:31 PM
Last Updated : 20 Feb 2024 12:31 PM

‘MSP குழப்பத்தைப் பரப்புவோர் எம்.எஸ்.சுவாமிநாதனை அவமதிக்கிறார்கள்’ - ராகுல் சாடல்

ராகுல் காந்தி

புதுடெல்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பாஜக தலைமையிலான மத்திய அரசை சாடியுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து குழப்பத்தை பரப்புகிறவர்கள், பசுமைப் புரட்தி தந்தை பாரத ரத்னா டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனை அவமதிக்கிறார்கள்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

பருப்பு வகைகள், மக்காச்சோளம், பருத்தியை அரசு நிறுவனங்கள் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலையில் ஐந்து ஆண்டுகளுக்கு வாங்கும் மத்திய அரசின் முன்மொழிவை விவசாயிகள் மறுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எம்எஸ்பி-க்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்ததில் இருந்து, மோடியின் கொள்கை பரப்பு அமைப்புகள் மற்றும் ஆதரவு ஊடகங்கள் எம்எஸ்பி குறித்து பொய்யான தகவல்களை பரப்புகின்றன. அதாவது, இந்தியாவின் பட்ஜெட்டில் குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவது சாத்தியம் இல்லை என்று பொய்யைப் பரப்புகின்றன.

உண்மை என்னவென்றால், சிஆர்ஐஎஸ்ஐஎல் -ன் படி 2022 - 23ல் அரசு,விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கி இருந்தால் கூடுதலாக ரூ.21,000 கோடி செலவாகியிருக்கும். இது மொத்த பட்ஜெட்டில் 0.4 சதவீதமாகும். ரூ.14 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யும் நாட்டில், ரூ.1.8 லட்சம் கோடி கார்ப்பரேட் வரிகள் ரத்து செய்யப்படும் நாட்டில், விவசாயிகளுக்கு மட்டும் சிறிய அளவு தொகையை செலவு செய்ய கண்ணீர்விடுவது ஏன்?.

எம்எஸ்பிக்கான உத்தரவாதம் விவசாயத்தில் முதலீட்டை அதிகரிக்கும், கிராமப்புற இந்தியாவின் தேவையை அதிகரிக்கும், பல்வேறு வகையான பயிர்களை வளர்ப்பதற்கான நம்பிக்கையை விவசாயிகளுக்கு தரும். இது நாட்டின் வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கும்.

குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து குழப்பத்தை பரப்புகிறவர்கள் டாக்டர் சுவாமிநாதனை அவமதிக்கிறார்கள். எம்எஸ்பிக்கான உத்தரவாதம் என்பது, விவசாயிகளை பட்ஜெட்டின் சுமையாக மாற்றாது. மாறாக அவர்களை ஜிடிபி வளர்ச்சிக்கு பங்களிப்பவர்களாக மாற்றும்.” இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். என்றாலும் கடந்த 2010-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசு சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளை நிராகரித்தது. 2010-ம் ஆண்டு சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரை நிராகரிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த காங்கிரஸின் பவன கெரா, சுவாமிநாதனின் 201 பரிந்துரைகளில் 175 ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x