காங்கிரஸ் கட்சியின் 4 வங்கிக் கணக்குகள் முடக்கம் - தீர்ப்பாயத்திடம் முறையீடு

காங்கிரஸ் கட்சியின் 4 வங்கிக் கணக்குகள் முடக்கம் - தீர்ப்பாயத்திடம் முறையீடு
Updated on
1 min read

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த மறுநாள் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக, வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை காங்கிரஸ் கட்சி அணுகியுள்ளது.

இது தொடர்பாக புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அஜய் மக்கான், “நாங்கள் அளிக்கும் காசோலையை வங்கிகள் வாங்குவதில்லை. நேற்று எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரிக்கையில், இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் என காங்கிரஸ் கட்சியின் 4 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. வருமான வரித் துறையால் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

2018-19-ம் நிதியாண்டுக்கான கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததால் வங்கிக் கணக்குகளை முடக்கியத்துடன் ரூ.210 கோடி அபராதமும் வருமான வரித் துறை விதித்துள்ளது.

பொதுமக்கள் நன்கொடை அளிக்கும் வகையில் உள்ள எங்களின் கிரவுட் ஃபண்டிங் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கத்தால் எங்களால் பணத்தை எடுக்க முடியாது. இது வெறும் வங்கிக் கணக்கு முடக்கமல்ல, ஜனநாயகம் முடக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்தை முடக்குவதற்கு சமம்” என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், வங்கிக் கணக்குகள் முடக்கம் தொடர்பாக வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை காங்கிரஸ் கட்சி அணுகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in