

ராய்ப்பூர்: மார்ச் 31-ம் தேதிக்குள் நாடு முழுவதும் மாவோயிஸ்ட் மற்றும் நக்சல் தீவிரவாதத்தை ஒழிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதன்படி, மாவோயிஸ்ட் அமைப்புகளில் இருந்து ஜனநாயகப் பாதைக்கு திரும்புவோருக்கு மறுவாழ்வு திட்டங்களை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இதையடுத்து, இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் சரணடைந்துள்ளனர்.
இந்நிலையில், சத்தீஸ்கர் அரசின் மறுவாழ்வு முயற்சியின் ஒரு பகுதியாக, சுமார் 120 சரணடைந்த மாவோயிஸ்ட்கள் ராய்ப்பூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சட்டப்பேரவையைப் பார்வையிட வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது.
இவர்களில் 59 வயதான முன்னாள் மத்திய குழு உறுப்பினர் தக்கலப்பள்ளி வாசுதேவ ராவும் (ஆஷண்ணா (எ) ரூபேஷ்) ஒருவர். இவர் மாவோயிஸ்ட்களின் ‘குண்டு தயாரிப்பாளர்’ என்று அறியப்பட்டவர். மேலும், 2003-ம் ஆண்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதான கொலை முயற்சி உள்ளிட்ட முக்கியத் தாக்குதல்களில் இவருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சரணடைந்தவர்களை ‘ஜெய் ஜோஹர்’ என பாரம்பரிய முறைப்படி முதல்வர் விஷ்ணு தியோ சாய் வரவேற்றார்.