

புதுடெல்லி: அல்-காய்தா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக டெல்லி அதிகாரிகள் கூறியதாவது: பல்வேறு மாநிலங்களில் ஆந்திரா மற்றும் டெல்லி காவல் துறையினர் இணைந்து நடத்திய ஒரு கூட்டு நடவடிக்கைக்கு பிறகு 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் முகமது ரஹ்மத்துல்லா ஷரீப், மிர்சா சோகைல் பெக், முகம்மது டேனிஷ் என 3 பேரும், பிஹாரில் ஷத்மான் தில்குஷ், அஜ்மானுல்லா கான் ஆகிய இருவரும் டெல்லியில் லக்கி அகமது என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோல் மீர் ஆசிப் அலி (மேற்கு வங்கம்), ஜீஷன் (ராஜஸ்தான்), அப்துல் சலாம் (கர்நாடகா), ஷாருக்கான், ஷியாக் பியாஸ் உர் ரஹ்மான் (மகாராஷ்டிரா), சைதா பேகம் (தெலங்கானா) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் ஒரு சூதாட்ட செயலி மூலம் அல்-காய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளின் வெளிநாட்டுத் தலைவர்களை சந்தித்து, பின்னர் அவர்களுடன் இணைந்துள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய ‘பெனெக்ஸ் டாட் காம்' என்ற குழுவுடன் அவர்களுக்குத் தொடர்பு இருக்கிறது.
இவர்கள் தங்கள் சமூக ஊடகப் பதிவுகளில் தேசியக் கொடிக்கு பதிலாக ஐஎஸ்ஐஸ் கொடியை பயன்படுத்தியுள்ளனர். மேலும், இவர்கள் தேசியக் கொடியை எரித்து, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை புகழ்ந்து பேசியுள்ளனர். இந்தியாவை ஓர் இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
மேலும் விசாரணையில் இவர்கள் பயிற்சிக்காக ஒரு மாதத்திற்குள் பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இவர்கள் இளைஞர்களை பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெறுமாறு ஊக்குவித்தும் வந்தனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு டெல்லி அதிகாரிகள் கூறினர்.