

அமராவதி: ஸ்ரீராம நவமி விழாவை யொட்டி நேற்று திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் சீதா தேவி, லட்சுமணர், அனுமன் சமேத ஸ்ரீராமருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடந்தன.
கடப்பா மாவட்டத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான பராமரிப்பில் உள்ள ஸ்ரீ ஒண்டிமிட்டா கோதண்டராமர் திருக்கோயிலில் நேற்று ராம நவமி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவ மூர்த்திகள் சிறப்பு திருமஞ்சன சேவைக்கு பிறகு மேள தாளங்கள் முழங்க பிரம்மோற்சவ கொடியேற்றம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி இக்கோயிலில் ஸ்ரீராமர் திருக்கல்யாண நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு மாநில அரசு சார்பில் சுவாமிக்கு பட்டு வஸ்திரம், சீர்வரிசைகள் வழங்க உள்ளார்.
பத்ராசலம் கோயிலில்.. தெலங்கானாவில் உள்ள ஸ்ரீராமர் கோயில்கள் அனைத்திலும் ராம நவமி விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் பத்ராசலம் கோதண்டராமர் திருக்கோயிலில் நேற்று சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தம்பதி சமேதராக கலந்துகொண்டு சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்கினார்.