

மெட்ரோ 2-ம் கட்டப் பணிகள் - பிரதமருக்கு முதல்வர் கடிதம்: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் தொடர்பாகவும், ஒப்புதல் அளிக்கும் நடைமுறையை விரைவுபடுத்திட வேண்டுமென்று கோரியும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய சொதப்பல்கள்: இபிஎஸ் பட்டியல்: அடிப்படை வசதிகள் இன்றி அவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து திமுக அரசு பயணிகளை கடும் சிரமத்துக்கு உள்ளாக்கியுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தினுள் உணவக வசதி, பணம் எடுக்கும் ஏடிஎம் மிஷின் வசதி, டீ, காபி, பால் விற்பனை நிலையங்கள், தண்ணீர் வசதி போன்ற இல்லை என குறைகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.
ஓபிஎஸ் எப்படி? -அதிமுக Vs தமிழக பாஜக: “பிரதமரின் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார் ஓபிஎஸ். மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என அவர் விரும்புகிறார்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதனிடையே "தேர்தல் முடிந்ததும் பாஜகவில் இணைந்து விடுவார் ஓபிஎஸ். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பாஜவுக்காக கூலிக்கு மாரடிப்பவராக இன்று ஓபிஎஸ்எஸ்ஸின் குரல் இருக்கிறது" என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
“2040-க்குள் நிலவில் இந்தியர் கால் பதிப்பார்” - வீரமுத்துவேல்: “இந்தியா சார்பில் வரும் 2040-ம் ஆண்டுக்குள் மனிதனை நிலவுக்கு அனுப்பும் பணி நிறைவேற்றப்படும்” என்று ‘சந்திரயான் 3’ திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உதகையில் தெரிவித்தார்.
தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: கோவையில் 12 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினர். கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பான தொடர் சோதனைகளின் ஒன்றாக இந்தச்சோதனை நடைபெற்றது. இதற்காக திட்டமிட்டப்படி, என்.ஐ.ஏ அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து காலை கோவைக்கு வந்தனர். இந்தச் சோதனையில் செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேுபோல், கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் மதுரையில் சனிக்கிழமை ஹாஜிமார் தெருவிலுள்ள வஹ்ததே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாவட்டத் தலைவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில் அவரது செல்போன், சிம்கார்டுகள், புத்தகம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
வீரர் ஷமர் ஜோசப்பை ரூ.3 கோடிக்கு வாங்கியது லக்னோ: தனது திறமையான ஆட்டத்தால் கிரிக்கெட் உலகை கலக்கி வரும் மேற்கு இந்திய தீவுகள் அணியின் இளம் வீரர் ஷமர் ஜோசப்பை ரூ.3 கோடிக்கு வாங்கியதாக லக்னோ அணி அறிவித்துள்ளது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு பதிலாக ஷமர் ஜோசப்பை வாங்கியதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அமிஷ் ஷாவின் ‘370 சீட்’ கணக்கு!: “நாங்கள், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்துள்ளோம். அதனால், மக்களவைத் தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு 370 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 இடங்களிலும் வெற்றியை கொடுத்து ஆசீர்வதிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
மேலும், "குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது நமது நாட்டின் ஒரு சட்டம். தேர்தலுக்கு முன் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். இதில் எந்தக் குழப்பமும் இல்லை” என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
‘பாஜகவை போல காங். ஆட்சியிலும் 40% கமிஷன்’: கர்நாடகாவில் பாஜக ஆட்சியின்போது அரசின் திட்ட பணிகளில் 40 சதவீத கமிஷன் வாங்கப்பட்டதைப் போலவே இப்போதைய காங்கிரஸ் ஆட்சியிலும் 40 சதவீத கமிஷன் வாங்குகிறார்கள் என அம்மாநில ஒப்பந்ததாரர் கூட்டமைப்பின் தலைவர் கெம்பண்ணா குற்றம் சாட்டியுள்ளார்.
“பஞ்சாப், சண்டிகரில் 14 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டி”: பஞ்சாப் மற்றும் சண்டிகரில் மொத்தம் 14 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஆம் ஆத்மியே அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்திருக்கிறார்.
‘பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் மோசடி’- மேற்கத்திய நாடுகள்: பாகிஸ்தான் பொதுத் தேர்தல் மோசடிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை வலியுறுத்தியுள்ளன.
பாகிஸ்தானின் தேசிய அவை மற்றும் மாகாண அவைகளுக்கான தேர்தல் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. தேசிய அவையின் மொத்தமுள்ள 264 இடங்களில் சனிக்கிழமை மாலை 5 மணி வரை 253 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, எந்த கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெரும் நிலையில் இல்லை. இதனால், நவாஸ் ஷெரீப்பும் பிலாவல் பூட்டோவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளார்கள்.
இதனிடையே, தனது ஆதரவு கட்சி பெரும்பாலான இடங்களில் வென்று முதலிடம் வகிக்கும் நிலையில், சிறையில் இருக்கும் இம்ரான் கான் உரையை ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கி பிடிஐ கட்சி வெளியிட்டிருந்தது. அதில், “லண்டன் ப்ளான் பலனிக்கவில்லை; மக்களுக்கு நன்றி” என்று நவாஸ் ஷெரீபை மறைமுகமாகச் சாடியிருந்தார். தனது கட்சியின் ஆதரவாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.