

சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா: முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இந்தத் தகவலை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.
பி.வி. நரசிம்மராவ் உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதை வரவேற்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவரது பேரனும் ஆர்எல்டி தலைவருமான ஜெயந்த் சவுத்ரி, பாஜக உடன் கூட்டணி சேர உள்ளதை உறுதிப்படுத்தி உள்ளார். பாஜகவின் கூட்டணி அழைப்பு குறித்த கேள்விக்கு அவர், “என்னால் எவ்வாறு மறுக்க முடியும்?” என்று கூறினார்.
எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா - சவுமியா சுவாமிநாதன் கருத்து: “பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கியதற்காக இந்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சிந்தனை மற்றும் மனிதாபிமான பயன்பாட்டினால், சமூகத்தின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என இளைய தலைமுறையினரை ஊக்குவிக்க உதவும்” என்று எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
தமிழக மீனவர்கள் பிரச்சினை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்: இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவித்திடவும், மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண கூட்டு நடவடிக்கைக் குழுவினைப் புதுப்பித்திடவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நில இழப்பீட்டுத் தொகை விவகாரம்: என்ஹெச்ஏ விவரம் அளிக்க உத்தரவு: 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்குப் பின்னர், எந்தெந்த மாவட்ட ஆட்சியர்கள் தீர்ப்பை மீறி, 3 ஆண்டுகளுக்கு பின்னர் நில இழப்பீட்டு கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து, நிலத்துக்கு இழப்பீடு கொடுக்க உத்தரவிட்டனர் என்ற விவரங்களைத் தாக்கல் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“3 ஆண்டுகளில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி கூட திறக்கப்படவில்லை”: “திமுக அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைக் கூட திறக்கவில்லை என்றும் ஒரே ஒரு மருத்துவ இடத்தைக் கூட கூடுதலாக உருவாக்கவில்லை என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே “அரசு மருத்துவப் பணிக்கு தமிழ் வழிக் கல்விக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மறுக்கும் தமிழக அரசின் போக்கு சமூக நீதிக்கு எதிரானது” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
“நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டிய கட்சி திமுக” - இபிஎஸ் தாக்கு: “அதிமுக மக்களிடத்தில் அபரிமிதமான வளர்ச்சியை பெற்றிருக்கும் பொறாமையால் தான், இன்றைக்கு தீய சக்திகள் எம்ஜிஆரை விமர்சிக்கிறார்கள். எம்.ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது, தீயசக்தி திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னார். திமுக நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டிய கட்சி” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஜெய் ஸ்ரீராம் - முகமது ஷமி கருத்து: "ஜெய் ஸ்ரீராம் என்று சொல்வதிலோ, அல்லாஹு அக்பர் என்று சொல்வதிலோ எந்த தீங்கும் இல்லை. ஏனெனில் இதில் எந்த வித்தியாசமும் இல்லை. ஆயிரம் முறை சொல்லட்டும்" என்று இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி கருத்து தெரிவித்துள்ளார்.
“சம்மன்களின் எண்ணிக்கைக்கு நிகராக பள்ளிகள் திறப்பேன்”: டெல்லியின் மயூர் விஹார் பிரிவு 3 பகுதியில் புதிய அரசுப் பள்ளிக்கு அரவிந்த் கேஜ்ரிவால் அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “தரமான கல்வியை வழங்குவதுதான் எனது அரசின் நோக்கம். விசாரணை அமைப்புகள் எனக்கு அனுப்பிய சம்மன்களின் எண்ணிக்கை அளவுக்கு நகரில் பள்ளிகளைத் திறப்பேன்” என்றார்.
உத்தராகண்ட் வன்முறையில் 2 பேர் உயிரிழப்பு, 100+ காயம்: உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தின் ஹல்த்வானி பகுதியில் ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக மதரஸா இடிப்பு சம்பவம் தொடர்பாக வெடித்த வன்முறையில் 2 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக அங்கு ஊரடங்கு உத்தரவும், கலவரக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணைய சேவையும் தடை செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்: பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் இம்ரான் கானின் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பாகிஸ்தானின் தேசிய அவை மற்றும் மாகாண சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை வெளியான முடிவுகளின்படி தேசிய அவைக்கான தேர்தலில் இம்ரான் கானின் பிடிஐ மற்றும் கூட்டணி கட்சிகள் 50 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), 44 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இம்ரான் கான் கட்சி சற்றே கூடுதல் இடங்களைப் பிடித்திருந்தாலும் இழுபறி நீடித்து வருகிறது.