சரண் சிங்குக்கு பாரத ரத்னா | பாஜக கூட்டணியை ‘உறுதி’ செய்த ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சவுத்ரி!

ஜெயந்த் சவுத்ரி | கோப்புப் படம்
ஜெயந்த் சவுத்ரி | கோப்புப் படம்
Updated on
2 min read

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவரது பேரனும் ஆர்எல்டி தலைவருமான ஜெயந்த் சவுத்ரி, பாஜக உடன் கூட்டணி சேர உள்ளதை உறுதிப்படுத்தி உள்ளார். பாஜகவின் கூட்டணி அழைப்பு குறித்த கேள்விக்கு அவர், “என்னால் எவ்வாறு மறுக்க முடியும்?” என்று கூறினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முந்தைய அரசுகள் செய்யாததை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி உள்ளார். இது அவரது தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது. எளிய மக்களை ஊக்குவிக்கும் பிரதமர் மோடியின் அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நாள் எனக்கு மிகப் பெரிய நாள்; மிகவும் உணர்ச்சிகரமான நாள். குடியரசுத் தலைவர், அரசு, பிரதமர் மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எடுக்கப்பட்ட முடிவு இது" என கூறினார்.

நீங்கள் பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளீர்களா என்ற செய்தியாளர்களின் தொடர்ச்சியான கேள்விக்கு பதில் அளித்த ஜெயந்த் சவுத்ரி, "என்னால் எவ்வாறு மறுக்க முடியும்? அதேநேரத்தில், தொகுதிகள் குறித்தோ, வாக்குகள் குறித்தோ பேசுவதற்கான நாள் அல்ல இது. மக்களின் உணர்வுகளையும் நாட்டின் இயல்பையும் பிரதமர் மோடி உணர்ந்திருக்கிறார் என்பதை அவர் தனது இந்த முடிவின் மூலம் உணர்த்தி இருக்கிறார். அதற்காக அவருக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டார்.

இதனிடையே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்த செய்தியாளர்கள், அவரிடம் நீங்கள் ஜெயந்த் சவுத்ரியிடம் பேசினீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அகிலேஷ், "பாரத ரத்னா விருது அறிவிப்புக்குப் பிறகு நான் பேசவில்லை. என்ன நடக்கிறதோ அது செய்தித்தாள் மூலம் தெரிகிறது. உங்கள் (பத்திரிகையாளர்கள்) மூலம்தான் நான் அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்கிறேன்" என குறிப்பிட்டார்.

அகிலேஷ் யாதவ் உடன் ஜெயந்த் சவுத்ரி நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். மேலும், சமாஜ்வாதி கட்சியுடன் சேர்ந்து ஆர்எல்டியும் இண்டியா கூட்டணியில் இருந்தது. இந்நிலையில், ஆர்எல்டி, பாஜக உடன் கூட்டணி சேர இருப்பது உத்தரப் பிரதேசத்தில் இண்டியா கூட்டணியை பலவீனப்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதை கருத்தில் கொண்டே, சவுத்ரி சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, சவுத்ரி சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட இருப்பது குறித்த அறிவிப்பில், "முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது நமது அரசின் அதிர்ஷ்டம். நாட்டுக்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்புக்காக இந்த மரியாதை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் தனது முழு வாழ்க்கையையும் விவசாயிகளின் உரிமைகள் மற்றும் நலனுக்காக அர்ப்பணித்தவர்.

உத்தரப் பிரதேச முதல்வராக இருந்தாலும் சரி, உள்துறை அமைச்சராக இருந்தாலும் சரி, எம்எல்ஏவாக இருந்தாலும், தேசத்தைக் கட்டியெழுப்ப சரண் சிங் எப்போதும் உத்வேகம் அளித்தார். அவசரநிலைக்கு எதிராகவும் உறுதியாக நின்றார். நமது விவசாய சகோதர, சகோதரிகளுக்கு அவர் காட்டிய அர்ப்பணிப்பும், நெருக்கடி நிலையின்போது ஜனநாயகத்துக்கான அவரது அர்ப்பணிப்பும் ஒட்டுமொத்த தேசத்துக்கும் உத்வேகம் அளிக்கிறது" என்று பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in