தாமதமின்றி ஓய்வூதியம் வழங்காவிடில் கோட்டை நோக்கி போராட்டம்: காமராசர் பல்கலை. ஓய்வூதியர் சங்கம் எச்சரிக்கை

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.
Updated on
1 min read

மதுரை: மாதம்தோறும் தாமதமின்றி ஓய்வூதியம் வழங்கவில்லை என்றால், கோட்டை நோக்கி போராட்டம் தொடரும் என காமராசர் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வூதியம் பெறும் 1202 பேரில், 484 பேர் குடும்ப ஓய்வூதியமும், 240 பேர் நிர்வாக ஓய்வூதியமும் பெறுகின்றனர். இந்தப் பல்கலையில் மாதந்தோறும் சம்பளம், ஓய்வூதியம் வழங்குவதில் தொடர்ந்து நிதி நெருக்கடி உள்ளது. கடந்த 2 மாதமாகவே ஓய்வூதியம் வழங்கவில்லை. இதை கண்டித்தும், ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தியும் பல்கலை ஓய்வூதியர் சங்கங்களின் சார்பில், துணைவேந்தர் அலுவலகம் முன் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓய்வூதியர் சங்கத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். செயலாளர் சுவாமி நாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓய்வூதியர்கள் என, ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஓய்வூதியர் சங்க, தலைவர், செயலாளர் கூறியது: ''எங்களின் போராட்டம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்வோம். சட்டசபை கூடும்போது, அங்கு வரும் ஆளுநருக்கு முன்பாகவும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இன்னும் 10 நாளில் எங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிடில் சட்டசபையில் நோக்கிய போராட்டம் தொடரும். பல்கலை இருந்து அனுப்பப்படும் பரிந்துரை கடிதங்கள் நிதிதுறை, உயர் கல்வித் துறை செயலாளருக்கு செல்கின்றன. ஆனாலும் செயல்படுத்த முடியவில்லை. துணைவேந்தர் தான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை.

இதற்கு முன்னால் இருந்த துணைவேந்தர்கள் ஏ.எல். லட்சுமணசாமி, ஆதிசேசய்யா, சாந்தப்பா போன்றோர் சென்னைக்கு சென்று அதிகாரிகளை சந்திக்காமல் நிதி போன்ற உத்தரவுகளை பெற்றனர். தற்போது சாதி, மதம் பார்த்து துணைவேந்தர்கள் நியமிக்கப்படுகின்றனர். தகுதியின் அடிப்படையின்றி நியமிப்பதால்தான். இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நேர்மை இருந்தால் ஃபைல்கள் பேசும்'' என்று அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in