எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா முதல் பும்ரா புதிய சாதனை வரை | செய்தித் தெறிப்புகள் 10  @ பிப்.03, 2024

எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா முதல் பும்ரா புதிய சாதனை வரை | செய்தித் தெறிப்புகள் 10  @ பிப்.03, 2024
Updated on
3 min read

எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு!: பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட தகவலில், “ஸ்ரீ எல்.கே.அத்வானி ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நாட்டின் மிகப்பெரிய இந்த கவுரவம் குறித்து அத்வானியிடம் பேசி எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட இந்த தருணம் எனக்கு மிகவும் உணர்ச்சி மிகுந்தது. அவருடன் பழகுவதற்கும், அவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும் எண்ணற்ற வாய்ப்புகள் கிடைத்ததை நான் எப்போதும் எனது பாக்கியமாகக் கருதுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

“பாரத ரத்னா... நான் பின்பற்றிய கொள்கைக்கு கிடைத்த கவுரவம்!”: “இன்று எனக்கு வழங்கப்பட்டுள்ள பாரத ரத்னா விருதை மிகுந்த பணிவுடனும் நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன். இது ஒரு நபராக எனக்குக் கிடைத்த கவுரவம் மட்டுமல்ல, நான் எந்தக் கொள்கைக்காகவும், லட்சியங்களுக்காகவும் எனது வாழ்நாள் முழுவதும் என்னால் முடிந்தவரை சேவை செய்தேனோ, அந்தக் கொள்கைகளுக்கும் லட்சியங்களுக்குமான கவுரவமாகவும் இதனைக் கருதுகிறேன்” என்று எல்.கே.அத்வானி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டதை அறிந்து தனது தந்தை மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக எல்.கே. அத்வானியின் மகள் பிரதிபா அத்வானி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அப்பா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவர் அதிகம் பேசக் கூடியவர் அல்ல. ஆனால், அவரது கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. நாட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அவர். இந்த தருணத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கும், நாட்டு மக்களுக்கும் நாங்கள் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் கூறினார்.

எல்.கே.அத்வானிக்கு தலைவர்கள் வாழ்த்து: எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி “எங்கள் உற்சாகத்தின் ஊற்றாக இருக்கக்கூடிய எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது பெருமையான உணர்வை ஏற்படுத்துகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “நாங்கள் தாதா என்று அழைக்கக்கூடிய எங்கள் தலைவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள மிக உயரிய முடிவு இது" என்று தெரிவித்துள்ளார்.

அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது கோடிக்கணக்கான இந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தெரிவித்துள்ளார்.

பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் எம்பியும், தெலங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவின் மகளுமான கவிதா, “அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. அத்வானிக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்பட இருக்கிறது. இரண்டுமே நல்ல விஷயம். பாஜகவின் திட்டம் முழுமை அடைந்திருப்பதாகக் கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

“தொகுதி பங்கீடு குறித்து முதல்வரே முடிவெடுப்பார்” - அன்பில் மகேஸ்: “தொகுதி பங்கீடு குறித்து முதல்வரே முடிவெடுப்பார். இவருக்கு சீட் கொடு, அவருக்கு சீட் கொடு, இந்த கூட்டணிக்கு சீட் கொடு என்று யாரும் சொல்லக்கூடாது. ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளரை, அனைவருக்கும் பிடித்த வேட்பாளரை நிறுத்துவோம் என முதல்வர் தெரிவித்துள்ளார்” என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஊடகப் பேட்டியில் கூறியுள்ளார்.

திமுக எம்.பி.க்கள் கருஞ்சட்டை போராட்டம் அறிவிப்பு: மத்திய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு புயல் வெள்ளநிவாரண நிதி உதவி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்யாத ஓரவஞ்சனையைக் கண்டித்து எதிர் வரும் பிப்ரவரி 8 அன்று காலை 10.00 மணிக்கு திமுக மற்றும் தோழமைக் எம்.பி.க்கள் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரான டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா: பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சொந்த காரணங்களுக்காகவும், வேறு சில கடமைகளுக்காகவும் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக பன்வாரிலால் புரோஹித் தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பன்வாரிலால் புரோகித் சந்தித்த மறுநாளில் ராஜினாமா முடிவை எடுத்துள்ளார்.

“அதானியைத் தவிர அனைவருக்கும் அநீதி” - ராகுல் தாக்கு: இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டாவில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, "நீதிக்காக குரல் கொடுப்பதும் இந்த யாத்திரையின் முக்கிய நோக்கம். ஒவ்வொருவரையும் ஒருங்கிணைக்க, ஜார்க்கண்ட்டில் அன்பின் கடைகளைத் திறக்கவே நாங்கள் இங்கு வந்துள்ளோம்.

நாடு முழுவதும் உள்ள ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் ஆகியோருக்கு எதிராக மத்திய அரசு அநீதி இழைத்து வருகிறது. ஒவ்வொருவருக்கு எதிராகவும் அநீதி இழைக்கப்படுகிறது. அதானியைத் தவிர மற்ற இந்தியர்கள் அனைவரும் அநீதியால் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

“பாஜக, ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு எதிராக போராடுவதே இலக்கு”: “மாநில அளவில் நமக்கிடையே இருக்கும் மாற்றுக் கருத்துகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தேசிய கண்ணோட்டத்தில் சிந்திக்க வேண்டும். பாஜக, ஆர்.எஸ்.எஸ் கொள்கைக்கு எதிராக போராடுவதுதான் நமது ஒரே இலக்கு” என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மம்தாவின் கருத்துக்கு பதிலளித்துள்ளார்.

IND vs ENG 2-வது டெஸ்ட்: 253 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து: விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. இந்தப் போட்டியில் 6 விக்கெட் வீழ்த்தியன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகவேக 150 ப்ளஸ் விக்கெட் வீழ்த்திய இந்தியர் என்ற பெருமையை பெற்றார் ஐஸ்ப்ரீத் பும்ரா.

“நான் இறக்கவில்லை; உயிரோடு தான் இருக்கிறேன்” - பூனம் பாண்டே: "நான் உயிரோடுதான் இருக்கிறேன். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக நான் இறக்கவில்லை" என பாலிவுட் நடிகை பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இன்னொரு வீடியோவில், "மன்னிக்கவும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பற்றிய உரையாடலை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் எண்ணம். அதற்காக நான் இறந்ததாக கூறினேன். உயிரை பறிக்கும் நோய் இது. இந்த நோய்க்கு அவசர கவனம் தேவை என்பதால், எனது மரணச் செய்தியால் அந்த கவனத்தை பெற முயற்சித்தேன்" என்று பூனம் பாண்டே பேசியுள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in