Published : 17 Jan 2024 12:55 PM
Last Updated : 17 Jan 2024 12:55 PM

கேரளா | குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு: நடிகர் சுரேஷ் கோபி மகள் திருமண விழாவிலும் பங்கேற்பு

திரிச்சூர்: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கேரளாவின் குருவாயூர் கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார்.

இரண்டு நாள் பயணமாக நேற்று கேரளா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இன்று (ஜன.17) காலை கொச்சியில் இருந்து திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூருக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அங்கு அவரை மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், பாஜக தலைவர்களும் வரவேற்றனர். இதனையடுத்து, அங்கிருந்து ஸ்ரீ வல்சம் கெஸ்ட் ஹவுஸ் சென்ற பிரதமர் மோடி, சிறிது நேர ஓய்வுக்குப் பின் அங்கிருந்து குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்குப் புறப்பட்டார். அப்போது வழிநெடுகிலும் ஏராளமான பாஜக தொண்டர்களும் பொதுமக்களும் கூடி அவரை வரவேற்றனர்.

குருவாயூரில் பிரதமர் மோடியை வரவேற்ற மக்களில் ஒரு பகுதியினர்

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, “அதிகாலையாக இருந்தபோதிலும், குருவாயூரில் ஏராளமான மக்கள் என்னை ஆசீர்வதிக்க வந்திருந்தனர். அவர்களின் அரவணைப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களுக்காக இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று என்னை தூண்டியது" என தெரிவித்துள்ளார். குருவாயூர் கோயிலுக்குச் சென்றபோது, குருவாயூர் தேவசம் நிர்வாகக் குழுவினர் பிரதமர் மோடியை வரவேற்றனர். கோயிலில் வழிபாடு மேற்கொண்ட பிரதமர் மோடி, கோயிலுக்கு நெய் மற்றும் தாமரை மலர்களை காணிக்கையாக அளித்தார். கோயிலில் சுமார் 30 நிமிடங்கள் இருந்த பிரதமர், பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.

"புனித குருவாயூர் கோயிலில் வழிபாடு மேற்கொண்டேன். இந்த கோயிலின் ஆன்மிக சக்தி அளப்பரியது. ஒவ்வொரு இந்தியரும் மகிழ்ச்சியாகவும் வளத்துடனும் வாழ பிரார்த்தித்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, கேரள நடிகரும் பாஜக பிரமுகருமான சுரேஷ் கோபியின் மகள் திருமண விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். மலையாள உச்ச நடிகர்களான மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர். மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.

இந்த மாதத்தில் கேரளாவின் திரிச்சூர் மாவட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது பயணம் இது. கடந்த முறை வந்தபோது நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் குருவாயூர் தொகுதியில் சுரேஷ் கோபிக்கு பாஜக சார்பில் வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x