Published : 13 Jan 2024 11:06 PM
Last Updated : 13 Jan 2024 11:06 PM

“அவர்கள் பாபரை நேசிக்கிறார்கள்; ராமரை அல்ல” - காங்கிரஸ் குறித்து அசாம் முதல்வர் கடும் தாக்கு

ஹிமந்த பிஸ்வா சர்மா

குவாஹாட்டி: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் காங்கிரஸ் பங்கேற்க மறுத்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ‘அவர்கள் பாபரை நேசிக்கிறார்கள்; ராமரை அல்ல’ என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியிருப்பதாவது: "காங்கிரஸ் கட்சியினர் தாங்கள் செய்த பாவங்களை கழுவ விஸ்வ ஹிந்து பரிஷத் ஒரு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியது. ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. வேறு எப்படி நாம் அவர்களுக்கு உதவ முடியும்? ராமர் கோயில் கட்டுவதற்கு எதிரான ஒரு சூழலை அவர்கள் உருவாக்கினர். ஆனாலும் கூட அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு.

இன்னொரு பக்கம், ஜவஹர்லால் நேரு முதல் ராகுல் காந்தி வரை அனைவரும் ஆப்கானிஸ்தானில் உள்ள பாபரின் சமாதியைப் பார்க்கச் சென்றனர். அவர்கள் பாபரை நேசிக்கின்றனர், ராமரை அல்ல. அவர்களை அழைக்க வேண்டும் என்ற முடிவே தவறானது. ராமர் மீது நம்பிக்கை உள்ளவர்களை மட்டுமே அழைத்திருக்க வேண்டும். ராமர் மற்றும் பாபர் இருவரில், காந்தி குடும்பத்தினர் முதலில் பாபருக்கே மரியாதை செலுத்துவார்கள்” இவ்வாறு ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் வரும் 22-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள், பல்வேறு துறை சார்ந்த பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த வகையில், காங்கிரஸ் தலைவர்களான சோனியா, மல்லிகார்ஜுன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்ட காங்கிரஸ் கட்சி, “ராமரை வணங்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை மதிக்கிறோம். அதேநேரம் கட்டுமானப் பணி முழுமையாக முடியாத நிலையில், ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ளது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் தேர்தல் ஆதாயத்துக்காக அவசரமாக கோயில் திறப்பு விழாவை நடத்துகின்றனர். இது ஆர்எஸ்எஸ், பாஜக நிகழ்ச்சி என தெளிவாக தெரிவதால், மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x