

குரூப்-2 முதன்மைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி: நீண்ட நாட்களாக வெளியிடப்படாமல் இருந்த குரூப்-2 முதன்மைத் தேர்வின் முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்டது. இதேபோல் குரூப் 2ஏ தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளன.
இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உட்பட பதவிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு 2022 மே 21-ம் தேதி நடைபெற்றது. முதன்மை எழுத்துத் தேர்வில் கட்டாயத் தமிழ்மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவு ஆகிய 2 தாள்களுக்குமான தேர்வு கடந்த ஆண்டு பிப்.25-ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மாலத்தீவில் வெளிநாட்டு தலையீட்டை எதிர்க்கிறோம்: சீனா: மாலத்தீவில் வெளிநாட்டு தலையீட்டை உறுதியாக எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது. மேலும், மாலத்தீவின் சுற்றுலா வளர்ச்சிக்கு சீனா ஒத்துழைக்கும் என்பது உள்பட இரு நாடுகளுக்கு இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
முதற்கட்ட வேட்பாளர்கள் தேர்வு? - இபிஎஸ் மறுப்பு: "யார், யாருக்கெல்லாம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் இருக்கிறதோ, அவர்கள் எல்லாம் முறையான தலைமைக் கழக அறிவிப்புக்குப் பின்னர், அங்கு வழங்கப்படும் படிவங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின்னர், மூத்த தலைமைக் கழக நிர்வாகிகள், கலந்தாலோசித்து யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ, அவர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படும்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மறைமுகமாக வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனரா என்ற கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்த இபிஎஸ் "ஊடகங்களில் வெளியாகும் செய்திகளுக்கு நாங்கள் பொறுப்பாளி அல்ல" என்றார்.
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் ஜன.22-ல் குற்றச்சாட்டுப் பதிவு: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை குற்றச்சாட்டுப் பதிவுக்காக வரும் ஜன.22-ம் தேதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. தன்னை கைது செய்யும் நோக்கத்தில், அமலாக்கத் துறை ஆவணங்களில் திருத்தம் செய்துள்ளதாக கூறி, செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் தீவிரவாதம் குறித்து ராணுவத் தளபதி விளக்கம்: “ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி மாவட்டங்களில் கடந்த 2017, 18 வரை அமைதி இருந்தது. ஆனால், இப்போது தீவிரவாத செயல்களை இங்கு தூண்டிவிடுவதில் எதிரிகளின் பங்களிப்பு உள்ளது. கடந்த 5, 6 மாதங்களாகவே இப்பகுதிகளில் தீவிரவாதம் அதிகரித்துள்ளது. இது கவனிக்கத்தக்கது. முன்பில்லாத அளவுக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் பரவலாக தற்போது இயல்பு திரும்பியுள்ளதால் எதிரிகள் அதைப் பொறுக்க முடியாமல் தீவிரவாதத்தைத் தூண்டி விடுகின்றனர்” என்று ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே கூறியுள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல்: ‘உடன்பாடு இல்லை’- மம்தா: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ எனும் கருத்தில் தங்கள் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் தனது நிலைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
நயன்தாராவின் ‘அன்னபூரணி’ நெட்ஃப்ளிக்ஸில் இருந்து நீக்கம்: நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘அன்னபூரணி’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வசனங்கள் இடம்பெற்றது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் இந்து அமைப்புகளிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.
நடிகை நயன்தாராவின் 75-வது திரைப்படமான சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது. இந்த படத்தில், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஃபர்ஜான் என்ற கதாபாத்திரம், கதாநாயகியை இறைச்சி சாப்பிட வைப்பதற்காக ராமர் இறைச்சி சாப்பிடுவார் என்று கூறுவது போலவும், அர்ச்சகர் மகளான கதாநாயகி ‘நமாஸ்’ செய்வது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இந்தப் படம் வேண்டும் என்றே எடுக்கப்பட்டுள்ளது என்று மும்பையை சேர்ந்த, சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர் மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, இப்படத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. பலரும் இப்படத்தை தடை செய்யவேண்டும் என்று பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில், தற்போது இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வசனங்கள் இடம்பெற்றது தொடர்பாக படத்தை இணைந்து தயாரித்த ஜீ நிறுவனம், விஷ்வ இந்து பரிஷர் அமைப்பிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. அக்கடிதத்தில் ‘படத்தில் சம்பந்தப்பட்ட காட்சியை நீக்கும் வரை அப்படத்தை நெட்ஃப்ளிக்ஸில் இருந்து நீக்குவதாக உறுதியளிக்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்: 2024-ம் ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலான ‘ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்’ வெளியிட்டுள்ளது. இதன்படி பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளும், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய ஆசிய நாடுகளும் முதலிடம் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியா தனது முந்தைய இடமான 80-வது இடத்தை இந்த ஆண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்திய பாஸ்போர்ட் மூலமாக 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
“எதிர்க்கட்சியாக இருக்கக் கூட காங்கிரஸுக்கு தகுதி இல்லை”: காங்கிரஸ் 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை'யைத் தொடங்குவதற்கு வடகிழக்கை தேர்ந்தெடுத்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றும், நாட்டில் எதிர்க்கட்சியாக இருக்கக் கூட காங்கிரஸுக்கு தகுதி இல்லை என்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். மேலும் அவர் “எனக்கு இது ‘பாரத் டோடோ அநியாய யாத்திரை’ போல் தெரிகிறது. அநீதிக்கு அடித்தளமிட்டு இந்தியாவை உடைத்த காங்கிரஸ், இப்போது பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொள்வது விந்தையானது” என்று தெரிவித்தார்.
‘உலக அளவில் டிசம்பரில் மட்டும் கரோனாவுக்கு 10,000 பேர் உயிரிழப்பு’: உலக அளவில் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் கோவிட் பாதிப்பால் உயிரிழந்திருக்கின்றனர் என்றும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படுவதிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்றும் ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் ஸ்பெயின் நாட்டில் உள்ள மருத்துவமனைகள், மருந்தகங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு அங்கு புதன்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.