Last Updated : 17 Dec, 2023 02:25 PM

 

Published : 17 Dec 2023 02:25 PM
Last Updated : 17 Dec 2023 02:25 PM

அகதிகளுக்கான ஐ.நா ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது: மக்களவையில் மத்திய அமைச்சர் முரளிதரன் தகவல்

எம்.பி. ரவிக்குமார் | கோப்புப்படம்

புதுடெல்லி: அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இத்தகவலை திமுக எம்.பி டி.ரவிகுமார் மக்களவையில் எழுப்பியக் கேள்விக்கான பதிலில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விழுப்புரம் தொகுதி எம்.பியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான டி.ரவிக்குமார் எழுப்பிய கேள்வியில், ’ஜி-20 நாடுகளின் பாலி மாநாட்டுத் தீர்மானம், சர்வதேச சட்டங்களையும், பலதரப்பு அமைப்பையும் மதிக்க வேண்டியது உலகில் அமைதியையும், நிலையான ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு அவசியம் என வலியுறுத்தியது. அதுகுறித்த இந்திய அரசின் நிலைபாடு என்ன? அகதிகளுக்கான ஐ.நா ஒப்பந்தத்திலும், நெறிமுறையிலும் இந்தியா கையெழுத்திடுமா? இல்லாவிட்டால் அதற்கான காரணம் என்ன? ’ எனக் கேட்டிருந்தார்.

இந்த வினாக்களுக்குப் பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் அளித்த பதிலில், ‘ஜி-20 நாடுகளின் பாலி மாநாட்டு ஒப்பந்தமானது கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அதில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. அகதிகளுக்கான 1951 ஆம் ஆண்டு ஐநா ஒப்பந்தமோ, 1967 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட நெறிமுறைகளோ வளரும் நாடுகளில் அகதிகள் அதிக எண்ணிக்கையில் நுழைவதால் ஏற்படும் பிரச்சனைகளைக் கணக்கில் கொள்ளவில்லை. எனவே அவற்றில் கையெழுத்திடும் எண்ணம் இந்திய அரசுக்கு இல்லை.’ எனத் தெரிவித்துள்ளார். இதன் மீது ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் எம்பி டி.ரவிகுமார் கூறும்போது, ‘மத்திய அமைச்சரின் இந்தப் பதில் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள லட்சக்கணக்கான அகதிகளுக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஐ.நா சபை 1951-ல் இயற்றிய அகதிகளுக்கான ஒப்பந்தத்தில் 140 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்தியா அதில் கையெழுத்திடாதது மட்டுமின்றி அகதிகளுக்கென சட்டம் எதையும் இதுவரை இயற்றவுமில்லை’ எனத் தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின்(UNHCR) ஒரு கணக்கின்படி, 2011-ல் இந்தியாவில் 204,600 அகதிகள் இருந்தனர். அவர்களில் ஆப்கானிஸ்தான் 13,200, மியான்மார் 16,300, திபெத் ஒரு லட்சம் மற்றும் 73,000 இலங்கைத் தமிழர்களும் இதில் அடங்குவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x