Published : 14 Dec 2023 08:17 PM
Last Updated : 14 Dec 2023 08:17 PM
புதுடெல்லி: நாடாளுமன்ற அத்துமீறலில் ஈடுபட்டு கைதான 4 பேரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்து திடீரென கீழே குதித்து புகையை கக்கும் குப்பிகளை இயக்கி அச்சத்தை ஏற்படுத்திய மனோரஞ்சன், சாகர் ஷர்மா, நாடாளுமன்ற வளாகத்தில் புகைகளை வெளியிட்டு கோஷம் எழுப்பிய அமோல் ஷிண்டே, நீலம் தேவி ஆகியோரை டெல்லி போலீசார் நேற்று கைது செய்தனர். தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் உபா சட்டம் உள்பட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரும் தேசிய புலனாய்வு அமைப்பின் வழக்குகளை விசாரிக்கும் டெல்லி சிறப்பு நீதிபதி ஹர்தீப் கவுர் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீசார் அனுமதி கோரினர். இதையடுத்து, 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள 4 பேரிடமும் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், 4 பேரும் ஒரே பதிலை அளித்ததாகவும், தாங்கள் கைது செய்யப்பட்டால் எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்பது குறித்து முன்னரே அவர்கள் முடிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 பேரும் நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு முன், விஷால் ஷர்மா என்பவரின் வீட்டில் தங்கி இருந்ததாகவும், இதையடுத்து டெல்லி அருகே குருகிராமில் இருந்த அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், முக்கிய குற்றவாளி லலித் ஜா தப்பியோடிய நிலையில் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்கள் 6 பேரும் இரண்டு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங் மீது பற்றுள்ளவர்கள் என்பதால் அந்த பெயரிலான ஃபேஸ்புக் பக்கம் மூலம் ஒன்றிணைந்துள்ளார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தன்று நான்கு பேருடன் லலித் ஜா நாடாளுமன்றத்துக்கு வந்ததாகவும், நாடாளுமன்றத்துக்குள் செல்ல 2 பாஸ் மட்டுமே கிடைத்ததால் மனோரஞ்சன் மற்றும் சாகர் ஷர்மா மட்டும் சென்றதாகவும் போலீசார் கூறியுள்ளனர். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் வண்ணப் புகைகளை உமிழும் குப்பிகள் மகாராஷ்ட்ராவின் கல்யாண் நகரில் வாங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அரசுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் எனும் நோக்கில் இவர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT