

இரண்டாவதும் பெண் குழந்தையாக பிறந்ததால், பெற்ற தாயே அந்த குழந்தைக்கு எமனாக மாறினார். பிறந்து பத்தே நாட்களான அந்த பெண் சிசுவை இரக்கமின்றி தண்ணீர் தொட்டியில் வீசி கொன்றார்.
திருப்பதியை அடுத்த பெருமாள்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர் ரெட்டி. இவர் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மோகனா . இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே 2 வயது மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இரண்டாவதாக மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.
மகன் பிறக்கவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்த மோகனா, அந்த பெண் சிசு மீது வெறுப்படைந்தார். இந்நிலையில், அந்த குழந்தை கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்ததால், இரவில் அதிகமாக அழுதது.
இதனால், ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த சிசுவை வீட்டின் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் வீசிக் கொன்ற மோகனா, எதுவும் தெரியாதது போன்று இருந்து விட்டார்.
காலையில் குழந்தை இல்லாததை கண்ட ஈஸ்வர், பல இடங்களில் தேடினார். எங்கும் கிடைக்காததால், திங்கள்கிழமை காலை திருப்பதி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை தேடினர். அப்போது தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்த குழந்தையின் சடலத்தை போலீஸார் கைப்பற்றினர். போலீஸார் நடத்திய விசாரணையில் குழந்தையை கொன்றது மோகனாதான் என்று தெரியவந்தது.
தனது மனைவி மனநலம் சரியில்லாதவர் என்பதால்தான், இதுபோன்று நடந்து கொண்டார் என போலீஸாரிடம் ஈஸ்வர் தெரிவித்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயே தனது குழந்தையை கொன்ற சம்பவம் திருப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.