மஹுவா எம்.பி பதவி பறிப்பு முதல் சென்னை நிலவரம் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ டிச.8, 2023

மஹுவா எம்.பி பதவி பறிப்பு முதல் சென்னை நிலவரம் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ டிச.8, 2023
Updated on
3 min read

திரிணமூல் காங். எம்.பி மஹுவா மொய்த்ரா பதவி பறிப்பு: பணம் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா வெள்ளிக்கிழமை பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருடைய மக்களவை எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் திரிணமூல் எம்பி மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து பாஜக எம்.பி., வினோத் குமாா் சோன்கா் தலைமையிலான மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை நவ.9-ஆம் தேதி வெளியிட்டது. அந்த அறிக்கையில், மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது.

மக்களவை நெறிமுறைக் குழு பரிந்துரை வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது ஒத்திவைப்புக்கு பின்னர் மதியம் 2 மணிக்கு மக்களவைக் கூடியதும் மஹுவா தனது தரப்பு கருத்தை முன்வைக்க விரும்பினார். ஆனால், அவருக்கு அவையில் பேச அனுமதி அளிக்கப்படவில்லை. மஹுவாவுக்கு அவையில் பேச அனுமதி அளிக்கக் கோரி மக்களவையில் எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பினர். கடும் அமளிக்கு மத்தியில் மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், “மக்களவை நெறிமுறைக் குழு பரிந்துரைக் குழுவின் அறிக்கையை ஏற்கப்படுகிறது. மஹுவா மொய்த்ராவின் நடவடிக்கை அறமற்றது, அநாகரிகமானது. அவையின் மாண்பை சிதைக்கும் வகையில் மஹுவா செயல்பட்டுள்ளார். அதனால் அவர் மக்களவை உறுப்பினராகத் தொடர இயலாது” என்று தெரிவித்தார்.

“பாஜகவுக்கு எதிராக அடுத்த 30 ஆண்டுகள் போராடுவேன்”: தனது எம்பி பதவி பறிக்கப்பட்டப் பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் மஹுவா மொய்த்ரா. அப்போது அவர், “ஒருவேளை, நாடாளுமன்றத்தில் என் வாயை அடைத்துவிட்டால் போதும், அதானி பிரச்சினை தீர்ந்துவிடும் என மோடி அரசு நினைக்கிறதுபோல. ஆனால், நீங்கள் ஒரு பெண் எம்.பி.யின் வாயை அடைக்க எந்த எல்லை வரை செல்வீர்கள் என்பதையே இந்த பதவிப் பறிப்பு நிகழ்வு காட்டுகிறது.

மக்களவை நெறிமுறைக் குழுவுக்கு என்னை வெளியேற்ற எந்த அதிகாரமும் இல்லை. ஆனால், இந்த அரசு நாடாளுமன்ற நெறிமுறைக் குழுவினை எதிர்க்கட்சிகளை 'புல்டோஸ்' செய்யும் ஆயுதமாக மாற்றி இருக்கிறது. நெறிமுறைக் குழு உருவாக்கப்பட்டதன் நோக்கம் இதுவே அல்ல. எனக்கு இப்போது 49 வயதாகிறது. நான் இன்னும் 30 ஆண்டுகளுக்கு பாஜகவுக்கு எதிராக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராடுவேன். இது பாஜக ஆட்சி முடியும் காலம். நான் மீண்டும் வருவேன்” என்றார்.

இதனிடையே, மஹுவா மொய்த்ராவின் எம்.பி பதவியை பறித்தது பாஜகவின் பழிவாங்கும் அரசியல் என்றும், இதன் மூலம் ஜனநாயகம் கொல்லப்பட்டுள்ளது என்றும் மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி காட்டமாக குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் வெள்ளம் வடிந்த பகுதிகளில் தூய்மைப் பணிகள் தீவிரம்: “தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு வெள்ளம் வடிந்த பகுதிகளில் உள்ள குப்பைகள், முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது” என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

சென்னை வெள்ளம் - தேவை ‘சுகாதார அவசர’ நடவடிக்கை: சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் நிலையில், அந்த மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மழைநீருடன், கழிவுநீரும் கலந்திருப்பதால் கிருமிகள் தோன்றி, தோற்று நோய்கள் உருவாகி பரவக்கூடிய ஆபத்து உள்ளது. தேங்கியிருக்கும் அசுத்தமான நீரானது காலரா, டைபாய்டு மற்றும் மலேரியா போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். மழைக்கால தொற்று நோய்களும் பரவ ஆரம்பித்தால், நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும் என சுகாதார அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநர், அவசரநிலைக்கு தயாராகுமாறு மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார அதிகாரிகளுக்கு நான்கு பக்க முன்னறிவிப்பை வழங்கியுள்ளார்.

இதனிடையே தமிழகம் முழுவதும் சனிக்கிழமை 3,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும். அதில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 1,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

‘மிக்ஜாம்’ புயலினால் ஏற்பட்ட பாதிப்பினை சீர்செய்திடவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவதற்கான வங்கி விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதேபோல், ‘மிக்ஜாம்’ புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க விரும்பும் தொண்டு நிறுவனங்கள் 7397766651 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் தெரிவிக்குமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

முன்னதாக, மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம். இச்சூழலில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட வேண்டுமென்று உங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், இதன் தொடக்கமாக என்னுடைய ஒரு மாத கால ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குகிறேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் - நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களுடைய ஒரு மாத கால ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கிடுமாறு கேட்டு கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

வேளச்சேரி ராட்சத பள்ளத்தில் மூழ்கிய 2 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு: சென்னை வேளச்சேரியில் கட்டுமான நிறுவனம் தோண்டிய ராட்சத பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த மற்றுமொரு தொழிலாளர் ஜெயசீலனின் சடலம் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் மீட்கப்பட்டது. சடலத்தை பெட்டியில் வைத்து பேரிடர் மீட்புக் குழுவினர் வெளியே கொண்டுவந்தனர். சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வெள்ளிக்கிழமை அதிகாலையில் நரேஷ் என்ற இளைஞரின் உடல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இரு தொழிளாலர்கள் உயிரிழந்த வழக்கில் கட்டுமான நிறுவன உரிமையாளர் மற்றும் கட்டுமான பணியிட மேற்பார்வையாளர் ஆகியோரை கைது செய்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை தேடி வருவதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

வட சென்னை மக்கள் போராட்டம்: சென்னையில் மழைநீர் தேங்கிய 450-க்கும் மேற்பட்ட இடங்களில் வட சென்னையில் மட்டும் 97 இடங்கள் உள்ளன. இவற்றில் பல இடங்களில் முழுமையாக வெள்ளநீர் வடியவில்லை. அதனால் தேங்கியுள்ள கழிவுநீர் கலந்த நீரை வெளியேற்ற வலியுறுத்தியும், இதுவரை மின்சாரம் வழங்கப்படாததை கண்டித்தும் வட சென்னையில் திரும்பிய பக்கமெல்லாம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோடநாடு கொலை வழக்கு: இபிஎஸ்எஸுக்கு ஐகோர்ட் கேள்வி: கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் தனக்கு எதிரான அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு பெற்ற உத்தரவை எதிர்த்து, பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் எதன் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கோருகிறீர்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மிசோரம் முதல்வராக லால்துஹோமா பதவியேற்பு: மிசோரம் முதல்வராக சோரம் மக்கள் இயக்கத் தலைவர் லால்துஹோமா பதவியேற்றார். மாநில ஆளுநர் ஹரி பாபு கம்பம்பட்டி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

5-வது முறையாக 6.5% ஆக தொடரும் ரெப்போ விகிதம்: நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடங்கி தொடர்ந்து 5வது முறையாக ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யப்படாமல் முந்தைய அளவிலேயே தொடர்கிறது.

அதேபோல், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதற்கான யுபிஐ கட்டண வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in