Published : 06 Dec 2023 03:10 PM
Last Updated : 06 Dec 2023 03:10 PM
புதுடெல்லி: 75 ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் வகுத்த அடிப்படைக் கோட்பாடுகளை நீதித்துறை பின்பற்றி வருகிறது. இந்த நாள் பொன் எழுத்துகளால் எழுதப்பட்டுள்ளது என இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார். டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 67-வது நினைவு தினத்தையொட்டி அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 67-வது நினைவு தினம் இன்று (டிச.6) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் சிலைக்கு இன்று இந்திய தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதையடுத்து அவர் ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்தப்பேட்டியில், "இந்த நாள் பொன் எழுத்துகளால் எழுதப்பட்டுள்ளது. இன்று, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் வாழ்க்கையை நாம் நினைவுகூர்கிறோம்.
75 ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் வகுத்த அடிப்படைக் கோட்பாடுகளை நீதித்துறை பின்பற்றி வருகிறது. எனவே இது எங்களுக்கு முக்கியமான நாள். இந்த ஆண்டு, உச்ச நீதிமன்ற வளாகத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் சிலை திறக்கப்பட்டது. அதன்மூலம் அவர் நம்முடன் இருப்பதாக உணர்த்தப்படுகிறது. அம்பேத்கரின் வாழ்வியல் கருத்துகளையும், கொள்கைகளையும் இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் என அனைவரும் பின்பற்ற வேண்டும். இந்த சட்ட கருத்தியல் என்பது நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கானது மட்டுமல்ல. அனைத்து தரப்பு மக்களுக்குமானது” என்றார்.
முன்னதாக அரசியலமைப்பு தினத்தையொட்டி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 7 அடி உயர சிலையை நவம்பர் 26 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT