

தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம், கொண்டாரெட்டி பல்லி எனும் குக்கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ரேவந்த் ரெட்டி (54). இவருக்கு கீதா என்கிற மனைவியும் நைமிஷா எனும் மகளும் உள்ளனர்.
இவர், 2006-ம் ஆண்டில் மிட்ஜல் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 2007-ம் ஆண்டு, ஒருங்கிணைந்த ஆந்திராவில் உள்ள மகபூப்நகர் மாவட்டத்தில் இருந்து சுயேச்சை மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர், சந்திரபாபு நாயுடு இவரை தெலுங்கு தேசம் கட்சியில் இணைத்துக்கொண்டு, 2009-ல் கோடங்கல் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளாராக போட்டியிட வைத்தார். அப்போது ரேவந்த் ரெட்டி காங்கிரஸ் வேட்பாளரான கோவர் தன ரெட்டியை தோற்கடித்து முதன்முறையாக சட்டப்பேரவை உறுப்பினரானார்.
அதன்பின்னர், 2014-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் ரேவந்த் ரெட்டி வெற்றி பெற்றார். ஆந்திர மாநிலம் பிரிந்த நிலையில், தெலங்கானா தெலுங்கு தேச கட்சியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். பின்னர், 2017-ல் தெலுங்கு தேசம் கட்சியை விட்டு விலகி, காங்கிரஸில் சேர்ந்தார். 2018-ல் காங்கிரஸ் கட்சியின் தெலங்கானா மாநில செயல் தலைவரானார்.
2018-ல் தெலங்கானாவில் நடந்த தேர்தலில் கோடங்கலில் நின்று தோல்வியை சந்தித்தார். 2019-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவர், தெலங்கானா மாநிலம், மல்காஜ்கிரி தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து இவரின் வளர்ச்சியை கண்டு, 2021ம் ஆண்டு தெலங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தலைவராக கட்சி மேலிடம் நியமனம் செய்தது.
தற்போது நடந்த தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில், கோடங்கல் மற்றும் காமாரெட்டி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். கோடங்கல் தொகுதியில் வெற்றி பெற்று, இன்று தெலங்கானா மாநில முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.