Election Results 2023: ம.பி.யில் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை - காங்கிரஸுக்கு பலத்த அடி!

Election Results 2023: ம.பி.யில் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை - காங்கிரஸுக்கு பலத்த அடி!
Updated on
1 min read

போபால்: மத்தியப் பிரதேசத்தில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம் இலக்கு 116
கட்சிகள் முன்னிலை
பாஜக 164
காங்கிரஸ் 65
இதர கட்சிகள் 1

மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதற்கு ஒரே கட்டமாக கடந்த மாதம் 17-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மத்தியப் பிரதேசத்தில் அடுத்து யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை 22.36 லட்சம் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் உட்பட மொத்தம் 5.6 கோடி வாக்காளர்கள் தேர்ந்தெடுத்தனர். இந்த மாநிலத்தில் பாஜக - காங்கிஸ் இடையே நேரடி போட்டி நிலவியது. அங்கு கடந்த 20 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் பாஜகவிடமிருந்து ஆட்சியை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சி களம் இறங்கியது. அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும், ஓபிசி பிரிவினரின் நலன் காக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக 4-வது முறையாக ஆட்சியை தொடர்ந்தது. இதனால் மக்களிடம் ஆட்சிக்கு எதிரான மனநிலையும் உள்கட்சி பூசலும் அதிகரித்து இருந்தது. இதேபோன்ற சூழல் கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலின்போதும் நிலவியது. இதன் காரணமாக 4-வது முறையாக முதல்வர் வேட்பாளராக்கப்பட்ட சிவராஜ் சிங்குக்கு தோல்வி கிட்டியது. கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. எனினும், அந்த ஆட்சியை கவிழ்க்க அக்கட்சியின் இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா உதவினார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 110 இடங்களையும், காங்கிரஸ் 109 இடங்களையும் கைப்பற்றியது.

இந்த முறையும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற தீவிரத்தில் பாஜக இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், 3 மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட 7 எம்.பி.க்களை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வைத்தது. அதேபோல் தேசிய அளவிலான மூத்த தலைவர்கள் 11 பேருக்கு அக்கட்சி வாய்ப்பளித்திருந்தது. இந்த நிலையில், சம பலத்துடன் தேர்தலைச் சந்திக்கும் நிலையில், இவ்விரு கட்சிகளுக்கிடையே இழுபறி நீடிப்பதாக கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மத்தியப் பிரதேசத்தில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in