‘எலி வளை’ தொழிலாளர்கள் உறுதுணை முதல் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ நவ.28, 2023

‘எலி வளை’ தொழிலாளர்கள் உறுதுணை முதல் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ நவ.28, 2023
Updated on
3 min read

உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் மீட்பு: உத்தராகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் கடந்த 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். இந்த அபார மீட்புப் பணியின் வெற்றியை நாடே மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது.

உயிர் காக்க உதவிய ‘எலி வளை’ தொழிலாளர்கள் @ உத்தரகாண்ட்: சில்க்யாரா சுரங்கத்துக்குள் சிக்கிய 41 தொழிலாளர்களை 17 நாட்கள் போராட்டத்துக்குப் பின்னர் 41 உயிருடன் மீட்க வழிவகுத்து, ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர் ‘எலி வளை’ சுரங்கத் தொழிலாளர்கள். அமெரிக்காவின் 25 டன் ஆகர் இயந்திரம் செய்ய முடியாத சவால் நிறைந்த பணியை இந்த ‘எலி வளை’ சுரங்கத் தொழிலாளர்கள் செய்துள்ளனர்.

இந்த முறை சுரங்கப் பணி மிகவும் அதிகமான உடல் உழைப்பு தேவைப்படக் கூடியது. ஒருவர் ட்ரில் செய்ய, இன்னொருவர் கழிவை அகற்ற, மூன்றாவது நபர் அதை ட்ராலியில் வைத்து வெளியேற்றுவார். இதே முறையைப் பின்பற்றிதான் உத்தராகண்ட் சுரங்கத்தில் நிபுணர்கள் துளையிட்டு தொழிலாளர்களை மீட்க வழிவகை செய்துள்ளனர்.

மெலிந்த தேகம், உயரம் குறைவான எலி-வளை சுரங்கத் தொழிலாளர்கள் சமதளம், மலைப்பகுதியில் எலி-வளை போல குடைந்து சிறிய அளவிலான சுரங்கம் தோண்டுவதில் கைதேர்ந்தவர்கள். இதன் காரணமாக ‘எலி-வளை’ தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

“2028-க்குள் மேலும் 29,500 பேருக்கு வேலை”- முதல்வர் தகவல்: பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சிப்காட் தொழில் வளாகத்தில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்காவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள JR One காலணி உற்பத்தித் தொழிற்சாலையை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், 2028-ம் ஆண்டுக்குள், கோத்தாரி ஃபீனிக்ஸ் நிறுவனம், மேலும் 2,440 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 29 ஆயிரத்து 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்று விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டிருக்கிறது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையால், கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஜாமீன் மனுவை திரும்பப் பெற அனுமதித்து, மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் பேலா எம். திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு, "செந்தில் பாலாஜியின் உடலில் இருக்கும் பிரச்சினைகளை மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம், மருத்துவக் காரணங்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. செந்தில் பாலாஜியின் சமீபத்திய மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்தபோதும், உயிருக்கு ஆபத்து இருப்பதாக குறிப்பிடப்படவில்லை. நானும் கூகுள் செய்து பார்த்தேன். இதை குணப்படுத்த முடியும் என்றுதான் கூறப்படுகிறது. மருத்துவ காரணங்களுக்காக அல்லாமல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஜாமீன் மனுவை பரிசீலிக்க முடியும்” என்று தெரிவித்தது.

புயல் சின்னம் தீவிரம்: 6 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் திங்கள்கிழமை காலை 8.30 மணி அளவில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 30-ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும். இதனால் தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் மீதான விசாரணை - ஐகோர்ட் உத்தரவு: முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகரை ஆறு மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, அதிமுக ஆட்சியில் சுடுகாட்டு கூரை அமைத்ததில் ஊழல் செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி நீர் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், சிறுகளத்தூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, அடையாறு உள்ளிட்ட கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

‘பை-பை கேசிஆர்’ என்று சொல்லும் நேரம் வந்துவிட்டது: ராகுல் காந்தி: “கேசிஆர் மிகவும் ஊழல் நிறைந்த அரசாங்கத்தை நடத்தி வருகிறார். காங்கிரஸை டேமேஜ் செய்யவும், பல்வேறு மாநிலங்களில் பாஜகவுக்கு உதவவும் ஏஐஎம்ஐஎம் கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்துகிறது. தற்போது தெலங்கானாவில் 'பை-பை கேசிஆர்' என்று சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரம் நிறைவு: நாடே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் பிரச்சாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. வாக்குப்பதிவு வியாழக்கிழமையும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது.

மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் ஏற்கெனவே தேர்தல் முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் 11 இஸ்ரேலியப் பிணைக் கைதிகள் விடுவிப்பு: இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிகப் போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழலில் திங்கட்கிழமை பின்னிரவில் மேலும் 11 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதற்குப் பதிலாக சிறையில் இருந்து 33 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவித்தது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in