“காங்கிரஸுக்கு ஊழல், வாரிசு அரசியல் மட்டுமே முக்கியம்” - ராஜஸ்தானில் பிரதமர் மோடி விமர்சனம்

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: "ராஜஸ்தானுக்கு தேவை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஓர் அரசு. காங்கிரஸ் கட்சிக்கு ஊழல் மற்றும் வாரிசு அரசியலைத் தவிர வேறு எதுவும் முக்கியம் இல்லை" என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்த வார இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டத்தில் திங்கள்கிழமை நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், "நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டதில் இருந்து, காங்கிரஸ், அதன் கூட்டணி கட்சிகள் பெண்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அக்கூட்டணி கட்சித் தலைவர்கள் நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிராக கண்டிக்கத்தக்க கருத்துகளைக் கூறி வருகின்றனர்.

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் சட்டப்பேரவையில் பெண்களுக்கு எதிராக அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால், இதுகுறித்து எந்த காங்கிரஸ் தலைவரும் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. ராஜஸ்தான் மக்கள் அங்கீகரித்த காங்கிரஸின் உண்மை முகம் இதுதான். அதேபோல், தலித்துகளுக்கு எதிராக அட்டூழியங்கள் நடப்பதைப் பார்க்கும் போதெல்லாம் காங்கிரஸ் தன்னுடைய கண்களை மூடிக்கொள்ளும்.

மொத்த நாடே வளர்ச்சியை நோக்கி இரவு பகலாக வேலை செய்து கொண்டிருக்கிறது. 21-ம் நூற்றாண்டில் நாடு வளர்ச்சியை எட்டும்போது ராஜஸ்தான் அதில் முக்கியப் பங்கு வகிக்கும். அதற்கு ராஜஸ்தானுக்கு, மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு தேவை. இங்கு பாஜக ஆட்சி ஏற்பட்டதும் பெட்ரோல், டீசல் விலை மறுஆய்வு செய்யப்படும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்" என்று பிரதமர் மோடி பேசினார்.

ராஜஸ்தானின் 200 தொகுதிகளுக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட உள்ளன. கடந்த 2018-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 73 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in