“என்னை வைத்து டீப்ஃபேக் வீடியோ... மிகவும் கவலை அளிக்கிறது!” - பிரதமர் மோடி

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: "நான் கார்பா நடனம் ஆடியது போன்ற ஒரு வீடியோவை சமீபத்தில் பார்த்தேன். இதுபோன்ற பல வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. இதுபோன்ற போலி வீடியோக்கள் மிகவும் கவலை அளிக்கின்றன” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைஃப், கஜோல் ஆகியோரின் முகங்களை வேறு சிலரின் முகங்களோடு பொருத்தி வெளியிடப்பட்ட மிக மோசமான போலி வீடியோக்கள் (டீப்ஃபேக் வீடியோ) சமூக வலைதளங்களில் வைரலாகின. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நடிகைகள் இது குறித்து தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி இருந்தனர். செயற்கை நுண்ணறிவு செயலியைக் கொண்டு இவ்வாறு வீடியோக்கள் தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பெண்களோடு சேர்ந்து கார்பா நடனம் ஆடுவதாக சமீபத்தில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இதையடுத்து, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, "நான் கார்பா நடனம் ஆடியது போன்ற ஒரு வீடியோவை சமீபத்தில் பார்த்தேன். இதுபோன்ற பல வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. இதுபோன்ற போலி வீடியோக்கள் மிகவும் கவலை அளிக்கின்றன. இது குறித்து சாட்ஜிபிடி குழுவினருடன் பேசி, எச்சரித்துள்ளேன். செயற்கை நுண்ணறிவு செயலி மூலம் இதுபோன்ற வீடியோக்கள் தயாரிக்கப்படுகின்றன. தொழில்நுட்பம் பொறுப்புடன் கையாளப்பட வேண்டும். ஊடகங்கள் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

இதுபோன்ற போலி வீடியோக்களை தயாரித்து வெளியிடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கடந்த வாரம் எச்சரித்தார். "இதுபோன்ற வீடியோக்களை தயாரித்து வெளியிடுபவர்கள், பரப்புபவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 2021-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறி இருந்தார். இந்த சட்டப்படி அதிகபட்சம் ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் 3 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in