

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
ரிஷி சுனக்குக்கு உளமார்ந்த வாழ்த்துகள். இங்கிலாந்தின் புதிய பிரதமருடன் இணைந்து செயல்பட ஆவலோடு காத்திருக்கிறேன். குறிப்பாக சர்வதேச விவகாரங்கள், 2030 தொலைநோக்கு திட்டத்தில் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன்.
ரிஷி சுனக் உட்பட இங்கிலாந்தில் வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்கு சிறப்பு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்தியாவையும் இங்கிலாந்தையும் இணைக்கும் ‘வாழும் பாலம்’ ஆக அவர்கள் உள்ளனர். நமது வரலாற்று உறவு, இன்றைய நவீன காலத்திலும் தொடர்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமர் சுட்டிக் காட்டிய ‘வாழும் பாலம்’ என்பது மேகாலயாவின் பழங்குடி மக்கள் கட்டும் வேர்ப் பாலம் ஆகும். சிமென்ட், ஜல்லி, இரும்பு இல்லாமல் உயிரோடு இருக்கும் மரங்களின் வேர்களை கொண்டு மேகாலய மக்கள் வேர்ப் பாலங்களை உருவாக்கி உள்ளனர். இவை மிகவும் வலுவானவை. சுமார் 20 முதல் 25 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக வேர்களைப் பின்னி, அவர்கள் வேர்ப் பாலத்தை உருவாக்கி உள்ளனர். மேகாலயாவின் பல்வேறு இடங்களில் இத்தகையவேர்ப்பாலங்கள் காணப்படுகின்றன. இவை சர்வதேச சுற்றுலாத் தலங்களாகவும் விளங்குகின்றன.
இங்கிலாந்தின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் ‘வாழும் பாலம்’ உவமையை பிரதமர் மோடி கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தற்போதைய இங்கிலாந்து பிரதமர் ரிஷி இந்து மதத்தை சேர்ந்தவர். அந்த நாட்டு மன்னர் 3-ம்சார்லஸ் கிறிஸ்தவர். அந்த நாட்டுதலைநகர் லண்டனின் மேயர் சாதிக்கான், பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த முஸ்லிம் ஆவார்.
இன்போசிஸ் நாராயண மூர்த்தி வாழ்த்து
ரிஷி சுனக் மாமனாரும் இன்போசிஸ் இணை நிறுவனருமான நாராயண மூர்த்தி கூறியிருப்பதாவது:
ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராகியுள்ளது நமக்கு பெருமை தரக்கூடிய தருணம். அவருடைய வெற்றிக்கு வாழ்த்துகள். இங்கிலாந்து மக்களுக்கு அவர் சிறப்பான ஆட்சி நிர்வாகத்தை வழங்குவார் என்ற நம்பிக்கை அதிகம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.