Published : 15 Nov 2023 01:44 PM
Last Updated : 15 Nov 2023 01:44 PM

''பாஜக தனது வாக்குறுதியில் இருந்து விலகிவிட்டது'' - காங்கிரஸில் இணைந்த அமின் பதான் குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியில் இணைந்த பாஜக மூத்த தலைவர் அமின் பதான்

ஜெய்ப்பூர்: பாஜக தனது வாக்குறுதியில் இருந்து விலகிவிட்டது என்று காங்கிரஸ் கட்சியில் இணைந்த ராஜஸ்தான் மாநில பாஜக மூத்த தலைவர் அமின் பதான் குற்றம் சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் மாநில பாஜக சிறுபான்மையினர் அணியின் மாநிலத் தலைவரும், ராஜஸ்தான் ஹஜ் கமிட்டியின் தலைவருமான அமின் பதான், பாஜகவில் இருந்து விலகி ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமின் பதான், "பாஜகவில் கடந்த 25 ஆண்டுகளாக இருந்தேன். கவுன்சிலராகவும், பல்வேறு வாரியங்களின் தலைவராகவும் இருந்துள்ளேன். பாஜகவில் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

நான் பாஜகவில் சேர்ந்தபோது பாஜகவின் சித்தாந்தமும் கொள்கையும் இப்படி இருந்ததில்லை. முன்பு தலைவர்களாக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய், பைரோன் சிங் ஷெகாவத் போன்றவர்கள் தற்போது அக்கட்சியில் இல்லை. பாஜக தனது வாக்குறுதியில் இருந்து விலகிவிட்டது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையெல்லாம் பார்த்து மனம் வேதனை அடைந்தே பாஜகவில் இருந்து ராஜினாமா செய்துவிட்டேன். விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோருக்காக அசோக் கெலாட் அரசு செயல்பட்டுள்ளது. எனவே, காங்கிரஸ் கட்சியில் சேர முடிவெடுத்தேன்" என தெரிவித்துள்ளார்.

அமின் பதான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அசோக் கெலாட், "காங்கிரஸ் கட்சி மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். முட்டாள்களின் தலைவர் என்று பிரதமர் மோடி கூறியது எதிர்பாராதது. பிரதமர் பதவி மதிப்பு மிக்கது. அந்தப் பதவியில் இருப்பவர் கண்ணியமாகப் பேச வேண்டும். ஆனால், அவர் பேசும் பேச்சைக் கேட்கும்போது, அவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

மணிப்பூர் பற்றி எரிந்தபோதும் அங்கு செல்லாதவர் பிரதமர் மோடி. அதன் முக்கியத்துவத்தை அவர்கள் உணரவில்லை. மாறாக, மணிப்பூரைவிட ராஜஸ்தானில் நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறினார்கள். இது மணிப்பூரின் நிலைமையை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சி. அமலாக்கத்துறையைக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் மத்திய அரசு, ஆளும் கட்சியினரைக் கண்டு கொள்வதில்லை" என குற்றம் சாட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x