51 படித்துறைகளில் 24 லட்சம் விளக்குகளுடன் தீபோற்சவம்: புதிய உலக சாதனைக்கு தயாராகும் அயோத்தி

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

அயோத்தி: உத்தரப் பிரசேத மாநிலத்தில் இருக்கும் கோயில் நகரமான அயோத்தி ஒரு புதிய உலக சாதனைக்கு தயாராகி வருகிறது. இதற்காக, அங்கு நடைபெற இருக்கும் தீபோற்சவ விழாவில் 51 படித்துறைகளில் 24 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றுவதற்கான தயாரிப்புகள் நடக்கிறது.

தீபாவளிக்கு முந்தைய நாள் நடக்கும் தீபோற்சவ விழா இந்த ஆண்டு இன்று (சனிக்கிழமை) மாலையில் தொடங்க இருக்கிறது. இந்த விழாவினை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைக்கிறார். இதற்காக சுமார் 25,000 தன்னார்வலர்கள் 24 லட்சம் அகல் விளக்குகளை ஏற்ற உள்ளனர். இந்த தீபோற்சவம் நடைபெறும்போது கின்னஸ் உலக சாதனை புத்தகக் குழு ஒன்று நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இருப்பர். அவர்கள் ட்ரோன் கேமரா உதவியுடன் விளக்குகளை எண்ணுவார்கள். அயோத்தியில் நடக்க இருக்கும் இந்த நிகழ்வில் உத்தரப் பிரதேச மாநில அரசின் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபோற்சவம் முடிந்த பின்னர் கண்கவர் லேசர் ஒளிவிளக்கு காட்சியும் நடத்தப்படும்.

இந்த நிகழ்வுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அயோத்தி சரக ஐஜி பிரவின் குமார் கூறுகையில், "இந்தப் பகுதி 14 போலீஸ் மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. நாங்கள் செயற்கை நுண்ணறிவு உதவியையும் பயன்படுத்துகிறோம். மக்கள் கூட்டமும் போக்குவரத்தும் கட்டுப்படுத்தப்படும்" என்று தெரிவித்தார். முன்னதாக, கடந்த ஆண்டு அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் 20,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் 15 லட்சத்துக்கும் அதிமான அகல் விளக்குகள் ஏற்றி கின்னஸ் சாதனை படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in