தமிழகத்தில் கனமழை அலர்ட் முதல் உச்சகட்ட சத்தீஸ்கர் அரசியல் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ நவ.4, 2023 

தமிழகத்தில் கனமழை அலர்ட் முதல் உச்சகட்ட சத்தீஸ்கர் அரசியல் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ நவ.4, 2023 
Updated on
2 min read

“மழைக்கு பதறும் காலம் மாறிவிட்டது” - முதல்வர் பெருமிதம்: “சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்குக் காரணம்.தூர்வாருதல், புதிதாக 876 கிலோ மீட்டருக்கு மழைநீர் வடிகால் அமைத்தது உள்ளிட்ட நமது அரசின் செயல்பாடுகளால் கனமழையின் தாக்கம் மக்களைப் பாதிக்காதவாறு தடுக்கப்பட்டுள்ளது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரியில் அதி கனமழைக்கு வாய்ப்பு: தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் தமிழகம், கேரளாவில் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கோயம்புத்தார், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலினுக்கு வைரல் காய்ச்சல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைரல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சலுக்கான சிகிச்சையோடு, சில நாட்கள் ஓய்வெடுக்கும்படியும் அவருக்கு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் வீட்டில் சோதனை: திருவண்ணாமலை நகரம் திண்டிவனம் சாலையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினர். திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூரில் உள்ள பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் அவருக்கு சொந்த கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் வெள்ளிக்கிழமை முதல் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

பேருந்தில் மாணவர்களை தாக்கிய நடிகை கைது: சென்னையில் அரசுப் பேருந்தில் படியில் தொங்கியபடி சென்ற மாணவர்களைத் தாக்கி ஓட்டுநர், நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை ரஞ்சனா நாச்சியாரை போலீஸார் சனிக்கிழமை காலை கைது செய்தனர். ரஞ்சனா மீது அரசுப் பேருந்து ஓட்டுநர் சரவணன் அளித்த புகாரின் படி, மாங்காடு போலீஸார் ரஞ்சனாவை அவரது வீட்டுக்கே சென்று கைது செய்தனர். அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“யாரையும் கைது செய்யாதது ஏன்?” - பூபேஷ் கேள்வி: “பிரதமர் மோடிக்கு துபாய் மக்களுடன் இருக்கும் எந்தத் தொடர்பு மஹாதேவ் செயலியைத் தடை செய்வதையும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதையும் தடுக்கிறது?” என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் கேள்வி எழுப்பியுள்ளார். சட்ட விரோத விளையாட்டுச் செயலி விவகாரத்தில் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பூபேஷ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சூதாட்ட நிறுவனத்திடம் ரூ.508 கோடியை பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து சாடினார். அவர் கூறுகையில், “சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசு உங்களைக் கொள்ளையடிக்க எந்த வாய்பையும் விட்டுவைக்கவில்லை. அவர்கள் மஹாதேவ் என்ற பெயரையும் விட்டுவைக்கவில்லை" என்றார்.

“தீயநோக்கம் கொண்ட பிரச்சாரம்”: சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் சட்டவிரோத பெட்டிங் செயலியிடமிருந்து பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. மேலும் இது தீங்கான நோக்கம் கொண்ட பிரச்சாரம் என சாடியுள்ளது. சட்டவிரோதமான பந்தையத்தை ஊக்குவிக்கும் மஹாதேவ் செயலியிடமிருந்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ரூ.508 கோடி பெற்றார் என்று அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்த நிலையில், காங்கிரஸ் கட்சி இவ்வாறு கூறியுள்ளது.

இதனிடையே, “சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக மகாதேவ் சூதாட்ட செயலி நிறுவனத்திடம் இருந்து ஹவாலா பணமாக ரூ.508 கோடியை முதல்வர் பூபேஷ் பெகல் பெற்றுள்ளார். இதுபோன்ற ஒரு மோசடி மக்கள் அறிந்திராதது. நமது நாட்டின் தேர்தல் வரலாற்றிலும் இதுபோன்று இதற்கு முன் நடந்தது கிடையாது. அதிகாரத்தில் இருந்து கொண்டு அவர் இத்தகைய குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்" என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார்.

‘காங்கிரஸுக்கு இண்டியா கூட்டணி முக்கியம்’: “காங்கிரஸ் கட்சிக்கு 'இண்டியா' கூட்டணி மிகவும் முக்கியம்” என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, இந்தக் கூட்டணி செயல்பாடுகளில் நிதிஷ் குமார் அதிருப்தியை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

காசா பள்ளி மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல்: காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 15 பேர் உயிரிழந்ததாகவும், 54 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 231 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.

நேபாள நிலநடுக்க பலி 150 ஆக அதிகரிப்பு:நேபாள நாட்டில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதாக இந்தியா உறுதி அளித்துள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in