

சென்னை: ஆந்திர மாநிலத்தில் நின்றிருந்த பயணிகள் ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் சுமார் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், விபத்தை அடுத்து சம்பந்தப்பட்ட ரயில் தடத்தில் செல்லும் ரயில்களின் இயக்கத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டுள்ளது கிழக்கு கடற்கரை ரயில்வே.
இதுகுறித்து கிழக்கு கடற்கரை ரயில்வே செய்தித் தொடர்பாளர் பிஸ்வஜித் சாஹூ தெரிவித்தது. “விபத்தை அடுத்து 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார் 15 ரயில்கள் மாற்று தடத்தில் திருப்பி விடப்பட்டுள்ளன. 7 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகள் சம்பவ இடத்தில் சிக்கித் தவிக்காமல் இருக்க பேருந்து ஏற்பாடுகள் செய்துள்ளோம். ரயில் தடங்களை ஓரளவு மீட்டு விட்டோம். முதற்கட்ட தகவலின்படி நின்றிருந்த ரயில் மீது மோதிய மற்றொரு ரயிலுக்கான சிக்னல் சார்ந்த குளறுபடி காரணம் என சொல்லப்படுகிறது. ரயில்வே சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்போதைக்கு மீட்புப் பணியில் முழு கவனம் செலுத்தி வருகிறோம். விபத்தில் காயமடைந்தவர்களை அருகாமையில் உள்ள மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்து வருகிறோம். உதவி எண்கள் அறிவித்துள்ளோம்” என தெரிவித்தார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.