சாதி மாறி திருமணம் செய்த தம்பதிகளைத் தாக்குவது சட்டவிரோதமானது: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

சாதி மாறி திருமணம் செய்த தம்பதிகளைத் தாக்குவது சட்டவிரோதமானது: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
Updated on
1 min read

சாதி மாறி திருமணம் செய்த தம்பதிகளைத் தாக்குவது சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

அதாவது, வெவ்வேறு சாதியைச் சேர்ந்த திருமண வயதை எட்டிய ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், அவர்களை கட்டப்பஞ்சாயத்து, சாதிஅமைப்பு பஞ்சாயத்து, ஊர் பஞ்சாயத்து என்ற பெயரில் தாக்குவது சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருமண வயதை எட்டிய ஓர் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதை ஊர் பஞ்சாயத்தோ, தனிநபரோ அல்லது இந்த சமூகமோ கேள்வி எழுப்ப முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

மேலும், சாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் இளம் தம்பதிகள் கவுரவ கொலை செய்யப்படுவதை தடுக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆலோசகர் ராஜூ ராமச்சந்திரன் அளித்த பரிந்துரைகள் மீது மத்திய அரசின் நிலைப்பாட்டையும் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.

சக்தி வாஹினி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கடந்த 2010-ல் இந்த வழக்கைத் தொடர்ந்தது. சாதி மாறி திருமணம் செய்பவர்களை கட்டப்பஞ்சாயத்து மூலம் தாக்குவதும், பிரித்துவைப்பதும் குறித்து முறையிட்டிருந்தது. இதனைத் தடுக்க உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலைக் கோரியிருந்தது. ஹரியாணா, உத்தரப் பிரதேச மாநிலங்களில் இத்தகைய கட்டப் பஞ்சாயத்து சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதைக் குறிப்பிட்டு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மத்திய அரசு, கிராம பஞ்சாயத்துகளின் வன்முறைகளில் இருந்து பெண்களைக் காக்க, கண்காணிக்க உச்ச நீதிமன்றமே ஏதாவது வழிமுறையை சொல்ல வேண்டும் எனக் கோரியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சாதி மாறி திருமணம் செய்த தம்பதிகளைத் தாக்குவது சட்டவிரோதமானது எனக் கூறியுள்ள உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணை வரும் பிப்ரவரி 5-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in