தெலங்கானா தேர்தலுக்காக ஹமாஸை காங்கிரஸ் கண்டிக்கவில்லை: அசாம் முதல்வர் விமர்சனம்

அசாம் முதல்வர் | கோப்புப் படம்
அசாம் முதல்வர் | கோப்புப் படம்
Updated on
1 min read

ராகுல் காந்தியின் வற்புறுத்தலின் பேரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவளிப்பதாகக் காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம்சாட்டியிருக்கிறார்.

உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது இஸ்ரேல் - ஹமாஸ் போர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தருவதாகத் தெரிவித்திருக்கிறது. அதே சமயம் பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளத்தில், “இஸ்ரேலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தக் கடினமான நேரத்தில் இஸ்ரேலின் பக்கம் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்’’ என்று இஸ்ரேலுக்கு ஆதரவாகப் பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “புதிதாக உருவாக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் ஒற்றுமை இல்லை. அது இந்திய மக்களை ஏமாற்றுவதற்காகவே உருவாக்கப்பட்டது. அண்மையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. ஹமாஸ் தாக்குதல் குறித்து அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த நேரம், ஹமாஸ் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டியது அவசியம் என்பதைக் கூட்டத்தின்போது ஒவ்வொருவரும் வெளிப்படையாகத் தெரிவித்தனர். ஆனால், ராகுல் காந்தி தெலுங்கானாவில் தேர்தல் வர இருப்பதால் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று சொன்னார். காரிய கமிட்டி கூட்டத்தில் நடந்ததை நான் உங்களுக்குச் சொல்கிறேன். அதன்பின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஹமாஸ் அமைப்புக்குக் கண்டனம் தெரிவித்து சமநிலையிலிருந்திருக்கலாம். அதாவது, நாங்கள் ஹமாஸ் அமைப்பைக் கண்டிக்கிறோம். அதேவேளையில் பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் இந்தியாவின் நிலையை ஆதரிக்கிறோம் என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை.

இதுதான் மிகவும் கவலை அளிக்கிறது. காங்கிரஸ் மிகவும் பழைமையானக் கட்சி. அவர்கள் வெளிப்படையாகக் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் ஓட்டு வங்கியைப் பார்க்கிறது. ஓவைசியின் வாக்கு வங்கியைக் கணக்கில் கொண்டுள்ளதால், ஹமாஸ் உடன் இணைந்து நிற்கிறது. ராகுல் காந்தி ஒரு பைக் ஓட்டுபவர் என்பதால், என்றாவது ஒரு நாள் அவர் காசாவுக்கு பைக்கில் செல்லலாம் அல்லது டிராக்டரில் ஏறலாம்'' என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in