Published : 16 Oct 2023 06:19 PM
Last Updated : 16 Oct 2023 06:19 PM

லாகின் விவகாரம்: பாஜக எம்.பி புகாருக்கு மஹுவா மொய்த்ரா பதில்

மஹுவா மொய்த்ரா | கோப்புப்படம்

புதுடெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களின் வலைதள லாகின் விவகாரத்தில், பாஜக எம்.பி துபே அளித்த புகாருக்கு மஹுவா மொய்த்ரா பதில் அளித்துள்ளார்.

மத்திய அமைச்சர்களுக்கு பாஜக எம்.பி துபே அனுப்பிய கடிதத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, அதற்கு பதில் அளித்துள்ள திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா, “நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களது பணிகளும் அவர்களின் தனி உதவியாளர்கள் (பிஏ), உதவியாளர்கள் உள்ளிட்ட பெரிய குழுவினரால் செய்யப்படுகிறது. மதிப்புக்குகுரிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வின் அவர்களே, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாடாளுமன்ற இணையத்தின் உள்நுழைவு மற்றும் எங்கிருந்து பயன்படுத்துகிறார்கள் என்ற விவரங்களை சிடிஆருடன் வெளியிடுங்கள். அதேபோல் அலுவலர்களுக்கு இணையத்துக்குள் உள்நுழைய வழங்கப்பட்ட பயிற்சி குறித்த விவரங்களையும் தயவுசெய்து வெளியிடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது லஞ்ச புகார் கூறியிருந்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, அது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் மற்றும் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘திரிணமூல் காங்ரகிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா தனது மக்களவை இணையதளத்தை பயன்படுத்தும் உள்நுழைவு அனுமதியை தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி மற்றும் அவரது ரியல் எஸ்ட்டே நிறுவனம் அதன் சொந்த லாபத்துக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தாரா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ‘மஹுவா மீது சுமத்தப்பட்டள்ள இந்தக் குற்றசாட்டுகள் மற்ற அனைத்தையும் விட மிக மோசமானதாக இருக்கலாம். இவை உண்மை என்று கண்டறியப்பட்டால், அது ஒரு தீவிரமான நம்பிக்கையை மீறிய குற்றச் செயல் என்பதோடு மட்டும் இல்லாமல், தேசப் பாதுகாப்பினை மீறிய செயலாகவும் இருக்கும். மக்களவை இணையதளத்துக்குள்ளே நுழையும் திரிணமூல் எம்.பி.யின் அனுமதி, அவர் இல்லாத இடத்தில் இருந்தும் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை பற்றியும் விசாரணை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ‘மஹுவா மொய்த்ராவின் செயல் தீங்கானது, சட்டவிரோதமானது, தேசப் பாதுகாப்புக்கு எதிரானது’ என்று கூறியுள்ள நிஷிகாந்த் துபே, அவர் மீதான குற்றசாட்டினை மிகவும் தீவிரமாக அணுகவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக தொழிலதிபர் தர்ஷன் ஹிரநந்தனியிடம் லஞ்சம் வாங்கியதாக பாஜக எம்.பி. துபே குற்றம்சாட்டியிருந்தார். மேலும், மஹுவாவுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்றும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x