Published : 11 Oct 2023 02:25 PM
Last Updated : 11 Oct 2023 02:25 PM

ஒடிசா ரயில் விபத்து | உரிமை கோரப்படாத 28 உடல்களை தகனம் செய்த தன்னார்வலர்கள்

ஒடிசா ரயில் விபத்து | கோப்புப்படம்

புவனேஸ்வர்: ஒடிசாவின் பலசோர் பகுதியில் நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த மூன்று ரயில் விபத்துக்களில் உயிரிந்தவர்களில் உரிமை கோரப்படாத 28 உடல்களை புவனேஸ்வர் மாநகராட்சி நிர்வாகம் தகனம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து புவனேஸ்வர் மாநகராட்சி மேயர் சுலோச்சனா தாஸ் கூறுகையில், "ரயில் விபத்தில் இறந்து உரிமை கோரப்படாதவர்களின் உடல்களைத் தகனம் செய்யும் பணி செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கியது. அனைத்துப் பணிகளும் புதன்கிழமை காலை 8 மணிக்கு நிறைவடைந்தது. பெண் தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்தனர். இறந்தவர்கள் என்ன மதம், அவர்கள் ஆணா பெண்ணா என்பது கூட அந்தப் பெண்களுக்குத் தெரியாது. உடல்கள் நான்கு மாதங்களுக்கும் மேலாக பாதுகாப்பட்டப்படுவந்ததால் அவை ஐஸ்கட்டிபோல மாறியிருந்தன. அனைத்து உடல்களும் புவனேஸ்வர் மாநகராட்சியால், புவனேஸ்வர் தகன மையத்தில் தகனம் செய்யப்பட்டன.

முதல் மூன்று உடல்களுக்கு இறுதிச் சடங்கு செய்த மதுஸ்மிதா பிரஸ்டி, ஸ்மிதா மோகன்தி, ஸ்வகதிகா ராவ் ஆகியோர் கூறுகையில், "அடையாளம் தெரியாத உடல்களுக்கு இந்த புனிதமான காரியத்தைச் செய்ய நாங்கள் எங்கள் சொந்த விருப்பத்தின் பெயரிலேயே முன்வந்தோம். ஒரு வேலை முந்தைய பிறப்புகளில் அவர்கள் எங்கள் சொந்தக்காரர்களாவும் இருந்திருக்கலாம்" என்றனர். ராவ் கூறுகையில், "இறந்தவர்கள் ஆணா பெண்ணா என்று அடையாளம் கூட காணமுடியாத அளவுக்கு உடல்கள் இருந்தன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் மனிதர்கள். அவர்களுக்கு அனைத்து மரியாதைகளுடனும் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன" என்றார். இறந்தவர்களின் எலும்புகளைச் சேகரித்து அதனை நீரில் கரைக்கும் பணியினை என்ஜிஓ ஒன்று ஏற்றுக்கொண்டிருந்தது.

பலசோர் மாவட்டம் பாஹாநகா பஜார் அருகே கடந்த ஜூன் 2-ம் தேதி நடந்த மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் இறந்தவர்களில் உரிமைகோரப்படாத உடல்கள் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன. இந்த உடல்களை விபத்துக்குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகளின் முன்னிலையில், எய்ம்ஸ் மருத்துவ அதிகாரிகள் புவனேஸ்வர் மாநகராட்சியிடம் ஒப்படைத்தனர்.

அனைத்து உடல்களும் மாநில அரசு, மத்திய அரசு மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றின் வழிகாட்டுதல்களின் படி தகனம் செய்யப்பட்டன. இறுதிச் சடங்குக்காக உடல்கள் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளன என்று பிஎம்சியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், விசாரணைக்காவும், பின்னாளில் சட்டச்சிக்கல்கள் ஏதும் வந்தால் அதற்கு பதில் அளிக்கும் விதமாகவும் உடல்களின் டிஎன்ஏக்கள் பாதுக்கப்படுகின்றன என்றார்.

நான்கு மாதங்களாக 28 உடல்களைக் கேட்டு யாரும் வரவில்லை. பின்னாட்களில் வரலாம். அதனால், சட்ட சிக்கல்களைக் கருத்தில் கொண்டு நாங்கள் இறந்தவர்களின் டிஎன்ஏவை பாதுகாக்கிறோம் என்று எய்ம்ஸ் மருத்துவமனை உடற்கூறியல் துறைத் தலைவர் பேரா. பிரவாஸ் திரிபதி தெரிவித்தார்.

புவனேஸ்வர் எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜூன் 4ம் தேதி இரவு மருத்துவமனைக்கு 123 உடல்கள் வந்தன. பின்னர் தலைமை மருத்துமனைகள், தனியார் மருத்துவமனைகளில் வைக்கப்பட்டிருந்த 39 உடல்கள் இங்கு கொண்டு வரப்பட்டன. அவைகளில் 81 உடல்கள் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டன. மேலும் 53 உடல்கள் டிஎன்ஏ மூலமாக உறுதிசெய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பபட்டன. மீதமிருந்த உரிமை கோரப்படாத 28 உடல்கள் இறுதிச் சடங்குகள் நடத்துவதற்காக பிஎம்சியிடம் அக்.10 ம் தேதி ஒப்படைக்கப்பட்டன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 2-ம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹாநகா பஜார் பகுதியில் தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது ஷாலிமர் - சென்னை கோரமண்டல் விரைவு ரயில் மோதியது. அப்போது, எதிர் திசையில் வந்த பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு ரயிலின் கடைசி பெட்டிகளும் விபத்தில் சிக்கி தடம்புரண்டன. இந்த கோர விபத்தில் 295 பேர் உயிரிழந்தனர். 1,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x