அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்கு ரூ.30 லட்சத்துக்கு மசூதி விற்கப்பட்டதாக புகார்: வக்ஃபு வாரிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அயோத்யா மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த மக்கள்
அயோத்யா மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த மக்கள்
Updated on
1 min read

புதுடெல்லி: அயோத்தியில் மசூதி ஒன்று, ராமர் கோயில் அறக்கட்டளைக்கு ரூ.30 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக வக்ஃபு வாரிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என முஸ்லிம்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பாபர் மசூதி-ராமர் கோயில் விவகாரத்தில் கடந்த 2019 நவம்பரில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானது. இதன் அடிப்படையில் அறக்கட்டளை அமைத்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுகிறது. இக்கோயிலுக்காக அதை சுற்றியுள்ள குடியிருப்புகள், சிறிய கோயில்கள், மடங்கள், விளை நிலங்கள் உள்ளிட்ட பலவும் அறக்கட்டளை சார்பில் விலைக்கு வாங்கப்பட்டன. இதில், ஒன்றாக ‘மஸ்ஜித்-எ-பதர்’ எனும் மசூதியும் இடம்பெற்றிருப்பது தற்போது வெளியாகி உள்ளது.

சுமார் 100 வருடப் பழமையானதாகக் கருதப்படும் இந்த மசூதி, ராமஜென்மபூமி அருகிலுள்ள பன்ச்சி டோலா பகுதியில் அமைந்துள்ளது. உ.பி. சன்னி முஸ்லிம் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான இந்த மசூதி ரூ.30 லட்சம் விலையில் அறக்கட்டளைக்கு விற்கப்பட்டுள்ளது. உ.பி. வக்ஃபுவாரியத்தின் தலைவரும், மசூதியின் முத்தவல்லியுமான முகம்மது ரெய்ஸும் கையெழுத்திட்டுஇந்த விற்பனையை பதிவு செய்துள்ளனர். இது சட்டவிரோதமானது எனவும் அந்த விற்பனை பதிவை ரத்து செய்து, வக்ஃபு வாரியம் மற்றும் முத்தவல்லி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக அயோத்யா மாவட்ட ஆட்சியர் நிதிஷ் குமாரிடம் முஸ்லிம்கள் சார்பில் அஞ்சுமன் முஹபீஸ் மஸ்ஜித் வா முக்கபீர் எனும் அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். இந்த அமைப்பு, அயோத்தி மசூதிகளை பாதுகாத்து பராமரிக்க உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இதன் சார்பில் அயோத்தி ராமஜென்மபூமி காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் புகார் தரப்பினரின் வழக்கறிஞர் அப்தாப் அகமது கூறும்போது, “இந்த மசூதியில் தொடர்ந்து 5 வேளை தொழுகை நடைபெற்று வந்தது. மத்திய வக்ஃபு வாரியங்களின் சட்டம் தொடர்பாக, உச்ச நீதிமன்ற வழக்குகளின் பல்வேறு தீர்ப்புகள் உள்ளன. இதன்படி, வக்ஃபு வாரியச் சொத்துகளை எவரும் பரிசாக அளிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது. எனவே, மஸ்ஜித்-எ-பதர் மசூதியை விற்பனை செய்திருப்பது சட்டப்படி குற்றம் ஆகும். எனவே, இந்த விற்பனையை உடனே ரத்து செய்து நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

இப்புகார் மீது விசாரணை மேற்கொண்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தினரும் போலீஸாரும் கூறியுள்ளனர். இதன் முடிவுகளை பொறுத்து தங்கள் நடவடிக்கை இருக்கும் என புகார் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in