

சமூக ஊடகப் பதிவுகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவு: "சட்டம் - ஒழுங்கு பிரச்சினை சில சமயங்களில், சில சமூக ஊடகச் செய்திகளால் ஏற்பட்டு விடுகிறது. ஆகவே, சமூக ஊடக பதிவுகளை தீவிரமாகக் கண்காணித்து அவற்றில் சாதி, மத ரீதியான வன்மங்களைப் பரப்பும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு பந்த்: 144 தடை, 1000 பேர் கைது: தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டதைக் கண்டித்து பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் கன்னட செயற்பாட்டாளர் வாட்டாள் நாகராஜ், விவசாயிகள் தலைவர் குருபுரு சாந்தகுமார் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். முழு அடைப்புப் போராட்டம் முழு வீச்சில் நடைபெறவில்லை. நகரின் ஒருசில பகுதிகளில் பூரண ஆதரவு இருந்தாலும் கூட, அரசு ஆதரவின்மை காரணமாக பல பகுதிகளில் போராட்டம் நீர்த்துப் போனது.
கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு: வரும் 28-ம் தேதி முதல் அடுத்த மாதம் 15-ம் தேதி வரை தமிழகத்துக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீரை திறக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் பரபரப்பு குற்றச்சாட்டு: உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. நீதிபதிகள் நியமன விவகாரத்தில் கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட பலர் மத்திய அரசின் அமைதி மற்றும் பாகுபாடு காரணமாக நீதிபதிகளாக நியமிக்கப்படாமல் இருப்பதாகவும், இதனால் இளம் திறமையாளர்களை நீதித் துறை இழக்கிறது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
“பாஜக எதிர்ப்பு அலை தொடங்கிவிட்டது...”:தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதை அடுத்து, பாஜக எதிர்ப்பு அலை நாடு முழுவதும் தொடங்கிவிட்டதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார்.
இதனிடையே, “தற்போது பாஜகவுடன் இருப்பவர்கள் எல்லோரும் கொள்கைப் பிடிப்பில்லாத சந்தர்ப்பவாத கூட்டணியினர்” என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் விமர்சித்துள்ளார்.
உடல் உறுப்பு தானம் செய்த நபருக்கு அரசு மரியாதை: தேனியைச் சேர்ந்த அரசு ஊழியர் விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்த நிலையில் அவர் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டிருப்பதால் அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு மேற்கொள்ளப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்வோரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று முதல்வர் அறிவித்த பின்னர் நிகழ்ந்த முதல் சம்பவம் என்பதால் இறந்த வடிவேலின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
பாஜக தலைமை அலுவலகப் பணியாளர் வீட்டில் ED சோதனை: தமிழகத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள 30 பேரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். இதில் சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஊழியராக பணியாற்றும் ஜோதிமணியின் வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது: இந்தியத் திரைத் துறையில் மிக உயர்ந்ததாகப் போற்றப்படும் ‘தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது’க்கு பாலிவுட் மூத்த நடிகையும், திரை ஆளுமையுமான வஹீதா ரஹ்மான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
குதிரையேற்றம்: தங்கம் வென்ற இந்தியா!: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் குதிரையேற்ற விளையாட்டில் டிரஸ்ஸாஜ் அணிப் பிரிவில் முதல் முறையாக இந்திய அணி தங்கம் வென்றுள்ளது . இதன்மூலம் ஆசிய போட்டியில் குதிரையேற்றத்தில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டுமென்ற 41 ஆண்டு கால வேட்கையை இந்தியா தணித்துள்ளது.
ராணுவ உறவு பாதிக்காது: கனடா ராணுவ துணைத் தளபதி: இந்தியா - கனடா இடையேயான தூதரக மோதல், இரு நாட்டு ராணுவ உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று இந்தியா வந்துள்ள கனடா ராணுவ துணைத் தளபதி மேஜர் ஜெனரல் பீட்டர் ஸ்காட் தெரிவித்துள்ளார்.