Asian Games 2023 | குதிரையேற்றத்தில் 41 ஆண்டு வேட்கை - டிரஸ்ஸாஜ் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம்!

தங்கம் வென்ற இந்திய குதிரையேற்ற அணியினர் | படம்: எக்ஸ்
தங்கம் வென்ற இந்திய குதிரையேற்ற அணியினர் | படம்: எக்ஸ்
Updated on
1 min read

ஹாங்சோ: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் குதிரையேற்ற விளையாட்டில் டிரஸ்ஸாஜ் அணிப் பிரிவில் முதல் முறையாக தங்கம் வென்றுள்ளது இந்திய அணி. இதன்மூலம் ஆசிய போட்டியில் குதிரையேற்றத்தில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டுமென்ற 41 ஆண்டு கால வேட்கையை இந்தியா தணித்துள்ளது.

கடைசியாக கடந்த 1982-ல் புதுடெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையட்டு போட்டியில் குதிரையேற்றத்தில் இந்தியா தங்கம் வென்றிருந்தது. அதன்பிறகு இப்போதுதான் அது சாத்தியமாகியுள்ளது. டிரஸ்ஸாஜில் அணியாக இணைந்து இந்தியா தங்கம் வென்றுள்ளது இதுவே முதல்முறை.

திவ்யகிர்தி சிங், சுதீப்தி ஹஜிலா, ஹிருதய் விபுல் சத்தா மற்றும் அனுஷ் அகர்வாலா ஆகியோர் அடங்கிய இந்திய அணியினர் சிறப்பாக செயல்பட்டு தங்கம் வென்றுள்ளனர். இந்த பிரிவில் இரண்டாம் இடத்தை சீனாவும், மூன்றாம் இடத்தில் ஹாங் காங்கும் பிடித்தன.

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. ஆசிய விளையாட்டு போட்டியின் இரண்டாவது நாளா திங்கள்கிழமை இந்தியா 2 தங்கம் உட்பட 6 பதக்கங்களை வென்றது. ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் ருத்ராங்ஷ் பாட்டீல் (632.5), ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (631.6), திவ்யான்ஷ் சிங் பன்வார் ( 629.6), ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1893.7 புள்ளிகள் குவித்து உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றது.

மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இதில் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.

ஆடவருக்கான 25 மீட்டர் ரேபிடு பையர் பிஸ்டல் அணிகள் பிரிவில் அனிஷ் பன்வலா, விஜய்விர் சித்து, ஆதர்ஷ் சிங் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1718 புள்ளிகள் குவித்து வெண்கலப் பதக்கம் வென்றது. ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 228.8 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

படகு போட்டியில் இந்தியா 2 வெண்கலப் பதக்கம் வென்றது. 4 பேர் கலந்து கொள்ளும் படகோட்டத்தில் ஜஸ்விந்தர் சிங், பீம் சிங், புனித் குமார், ஆஷிஸ் கோலியன் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி நூலிழையில் வெள்ளிப் பதக்கத்தை தவறவிட்டு வெண்கலப் பதக்கம் வென்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in