

ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க உலகத் தலைவர்கள் வருகை: ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஜப்பான் பிரதமர் கிஷிடா உள்ளிட்ட உலகத் தலைவர்கள் புதுடெல்லி வந்துள்ளனர்.
ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றதை அடுத்து, அந்த அமைப்பு சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாநாடுகள் நடத்தப்பட்டன. இதன் நிறைவாக ஜி20 உச்சிமாநாடு புதுடெல்லியில் நாளை தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பங்கேற்க ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் புதுடெல்லிக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். தலைநகருக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டுத் தலைவர்களை மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
மூன்று நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை: மொரீஷியஸ் பிரதமர், பங்களாதேஷ் பிரதமர், அமெரிக்க அதிபர் ஆகியோருடன் வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் உள்ள தமது இல்லத்தில் இருதரப்பு சந்திப்புகளை நடத்துகிறார். செப்.9, 10 தேதிகளில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டினை ஒட்டி பிரதமர் மோடி 15 உலக நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சனிக்கிழமை ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, கூடுதல் நிகழ்வாக அன்று இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். அடுத்த நாள் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை மதிய உணவு வேளையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
“மோடி அரசு அச்சத்தில் இருப்பதையே இது காட்டுகிறது”: இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என்ற வார்த்தை பயன்பாடு, நரேந்திர மோடி அரசு அச்சத்தில் இருப்பதையே காட்டுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஜி20 விருந்து அழைப்பிதழில் பாரத குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது சர்ச்சையான நிலையில், இந்த விருந்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைக்கப்படாதது மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபல நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்: பிரபல நடிகர் மாரிமுத்து வெள்ளிக்கிழமை காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56. சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மாரிமுத்து. இந்த சீரியலில் இவர் பேசும் வசனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இவர் தொடர்பான மீம்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ட்ரெண்ட் ஆகின.
மாரிமுத்து பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ’கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ உள்ளிட்ட படங்களை இயக்கியும் உள்ளார். ’பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகியின் தந்தையாக நடித்த இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நடிகர் மாரிமுத்துவின் மறைவு தமிழ்த்திரையுலகுக்கு ஒரு பேரிழப்பு என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது” என்று நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சூமோட்டோ வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு: தமிழக வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டது மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி விடுவிக்கப்பட்டது ஆகியவற்றுக்கு எதிராக, தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளில், லஞ்ச ஒழிப்புத் துறை, அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு அப்டேட்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உதயநிதி மீது தாமாக முன்வந்து வழக்கு பதியவேண்டும்: சனாதனத்திற்கு எதிராக பேசிய விவகாரத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து அமைச்சர் உதயநிதி மீது வழக்கு பதியவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ ஜாமீன் மனு தள்ளுபடி:சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமீன் மனு 5வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது.
குறுவை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம்: ராமதாஸ்: தண்ணீர் இல்லாமல் கருகிய குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். விளைச்சல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும், பாதிப்பின் மதிப்பை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
2024 தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் பாஜக கூட்டணி: வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - பாஜக கூட்டணிக்கான புரிதல் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.