சனாதன சர்ச்சையில் வலுக்கும் திமுக - பாஜக மோதல் | செய்தித் தெறிப்புகள் 10 @ செப்.7, 2023

சனாதன சர்ச்சையில் வலுக்கும் திமுக - பாஜக மோதல் | செய்தித் தெறிப்புகள் 10 @ செப்.7, 2023
Updated on
3 min read

சனாதன சர்ச்சை: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி: “ஒரு செய்தி வந்தால், அது உண்மையா, பொய்யா என்பதை அறிந்துகொள்ளும் அனைத்து வசதிகளும் நாட்டின் பிரதமருக்கு உண்டு. அப்படி இருக்கையில், அமைச்சர் உதயநிதி சொல்லாத ஒன்றைச் சொன்னதாகப் பரப்பியது குறித்து, பிரதமர் அறியாமல் பேசுகிறாரா? அல்லது அறிந்தேதான் பேசுகிறாரா?” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூகத்தின் சரிபாதிக்கும் அதிகமான பெண் இனத்தை 'சனாதனம்' என்ற சொல்லை வைத்துத்தான் அடிமைப்படுத்த நினைக்கிறார்கள். இத்தகைய அடக்குமுறை சிந்தனைகளுக்கு எதிராகத்தான் அமைச்சர் உதயநிதி பேசினார். இத்தகைய கொள்கைகளை முற்றிலுமாக ஒழித்தாக வேண்டும் என்று சொன்னார்.

இதனைத் தாங்கிக் கொள்ள முடியாத பாஜக ஆதரவு சக்திகள், 'சனாதன எண்ணம் கொண்டவர்களை இனப்படுகொலை செய்யச் சொன்னார் உதயநிதி' என்று பொய்யைப் பரப்பினார்கள். இத்தகைய பொய்யைப் பரப்புவதற்காக பாஜகவினரால் திட்டமிட்டு வளர்க்கப்படும் சமூக வலைத்தள கும்பலானது, இதனை வட மாநிலம் முழுவதும் பரப்பியது. 'இனப்படுகொலை' என்ற சொல்லை தமிழிலோ, ஆங்கிலத்திலோ அமைச்சர் உதயநிதி எந்த இடத்திலும் சொல்லவில்லை. ஆனால் அப்படிச் சொன்னதாக பரப்பினார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் விவரித்துள்ளார்.

தோல்விகளை மறைக்க பாஜக பொய்யைப் பரப்புகிறது: உதயநிதி: "9 ஆண்டு கால ஆட்சியின் தோல்விகளை மறைக்க பாஜக கையில் எடுத்துள்ள பொய் கூச்சல்களை புறந்தள்ளி,கழகப்பணி - மக்கள் பணிகளில் கவனம் செலுத்தி சமத்துவம் - சமூக நீதி காப்பதற்கான நம் பயணத்தை தொடர்வோம்" என திமுக தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

“சனாதனம் என்பது கொடிய எச்.ஐ.வி வைரஸ் போன்றது” - ஆ.ராசா: ‘டெங்கு, மலேரியா, கரோனாவைப் போல சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று’ என உதயநிதி தெரிவித்த கருத்து நாடு முழுவதும் விவாதத்தைக் கிளப்பியிருக்கும் நிலையில், ‘சனாதனம் என்பது கொடிய எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி வைரஸைப் போன்றது’ என நீலகிரி எம்.பியும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா பேசியிருக்கிறார்.

ஆர்.ராசா பேச்சுக்கு பாஜக கண்டனம்: ஆ.ராசாவின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான தர்மேந்திர பிரதான், "பெயர் மாறுவதால் ஒன்றின் நோக்கமும் குணமும் மாறாது. சனாதன தர்மம் பற்றிய மூர்க்கத்தனமான கருத்துகளை இம்முறை ஆ.ராசா வெளிப்படுத்தி இருக்கிறார். இண்டியா கூட்டணியின் மூளை மழுங்கிப்போய் இருப்பதையும், அந்தக் கூட்டணிக்கு இந்து மதத்தின் மீது ஆழமான வெறுப்பு இருப்பதையும் ஆ.ராசாவின் பேச்சு காட்டுகிறது.

இந்தியாவின் ஆன்மாவை, உணர்ச்சியை, வேர்களை காங்கிரஸ் கட்சியும் அவர்களது கூட்டணியினரும் எவ்வாறு களங்கப்படுத்துகிறார்கள் என்பதை நாடு கவனித்துக் கொண்டிருக்கிறது. இந்த வெறுப்புணர்ச்சியாளர்களுக்கு, 'சனாதனம் நித்தியம், சனாதனமே உண்மை' என்பதை நினைவூட்டுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று கூறி இருப்பதன் மூலம் இண்டியா கூட்டணியின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சனாதன தர்மத்துக்கு எதிரான பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்றும், எந்த ஒரு மதத்தையும் இழிவுபடுத்திப் பேச யாருக்கும் உரிமை இல்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறிய நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சர்களும், பாஜக தலைவர்களும் தொடர்ந்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சனாதன சர்ச்சை: திமுகவிடம் இருந்து விலகி நிற்கும் காங்கிரஸ்: சனாதன தர்மம் குறித்த திமுக தலைவர்களின் கருத்துக்களை தாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கெரா, "அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும் கொள்கையை காங்கிரஸ் கட்சி கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மதத்தையும், அனைவரின் நம்பிக்கையையும் நாங்கள் மதிக்கிறோம். எவர் ஒருவரும் வேறொருவரின் நம்பிக்கையை குறைத்து மதிப்பிட முடியாது. இதுபோன்ற கருத்துகளை அரசியல் சாசனமும் ஏற்கவில்லை; காங்கிரஸ் கட்சிக்கும் இதில் நம்பிக்கை இல்லை.

திமுகவின் கருத்தை ஏன் கண்டிக்கவில்லை என கேட்கிறீர்கள். அவர்களின் கருத்துகளை ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நாங்கள் தெரிவிக்கிறோம். இது குறித்து திமுகவுக்கு எந்த வலியுறுத்தலையும் நாங்கள் முன்வைக்க மாட்டோம். எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொருவரின் மதத்தையும் மதிக்கக்கூடியவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஒருவரின் கருத்தை திரித்துப் பேச வேண்டும் என்று யாராவது நினைத்தால் அதற்கான சுதந்திரம் அவர்களுக்கு உள்ளது. இவ்வாறு திருத்திப் பேசுவது பிரதமருக்கு பொருத்தமாக இருக்கும் என நினைத்தால், அவர் திரித்துப் பேசட்டும். ஆனால் இந்தியக் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் அனைத்து நம்பிக்கைகள், மதங்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

உதயநிதி, சேகர்பாபு மீது நடவடிக்கை கோரி ஆளுநரிடம் பாஜக கடிதம்: சனாதனம் குறித்து வெறுப்புப் பிரச்சாரம் செய்ததாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரியும், அமைச்சர் சேகர் பாபுவை பதவி நீக்கம் செய்யக் கோரியும் தமிழக ஆளுநரிடம், பாஜக சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பொன்முடி வழக்கை விசாரிக்கும் நீதிபதி யார்?: சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து முடிவு செய்வதற்காக செப்டம்பர் 14-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹரியாணா முதல்வருக்கு ஆம் ஆத்மி கண்டனம்: வேலைவாய்ப்புக்காக தொழிற்சாலை கொண்டுவர வேண்டி கோரிக்கை விடுத்த பெண்ணை நிலவுக்கு அனுப்புவதாகக் கூறி கிண்டல் செய்த ஹரியாணா முதல்வருக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது.

“சமூகப் பாகுபாடுகள் இருக்கும்வரை இட ஒதுக்கீடு அவசியம்”: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், "சமூகத்தில் பாகுபாடுகள் இருக்கும்வரை இட ஒதுக்கீடு அவசியம். ஆர்எஸ்எஸ் அமைப்பானது அரசியல் சாசனம் பரிந்துரைத்துள்ள இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

ஆசியான் - இந்தியா ஒத்துழைப்பை வலுப்படுத்த 12 அம்ச திட்டம்: 21-ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு. நமது இந்த நூற்றாண்டில் கோவிட் 19-க்கு பிந்தைய ஓர் உலக ஒழுங்கு தேவைப்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் - இந்தியா இடையிலான ஒத்துழைப்பினை ஊக்குவிப்பதற்காக 12 அம்ச திட்டத்தினையும் முன்மொழிந்தார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in