‘இண்டியா’வின் தீர்மானங்கள் முதல் ஒரே நாடு ஒரே தேர்தல் ஆய்வு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ செப்.1, 2023
இண்டியா கூட்டணியின் முக்கியத் தீர்மானங்கள்: மக்களவைத் தேர்தலை இயன்றவரை இணைந்தே எதிர்கொள்வோம் என ‘இண்டியா’ கூட்டணி சார்பில் மும்பை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இண்டியா கூட்டணி சார்பில் மூன்று முக்கியத் தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:
‘மக்களவைத் தேர்தலை இயன்றவரை இணைந்தே எதிர்கொள்வது, தொகுதி பங்கீட்டுக்கான ஏற்பாடுகளை விரைவாகத் தொடங்கவும், விட்டுக் கொடுத்துச் செல்வது என்ற அணுகுமுறையைக் கையாண்டு தொகுதிப் பங்கீட்டை விரைவாக முடிப்பது.’
‘மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொதுக் கூட்டங்களை ஒருங்கிணைப்பது.’
‘இணையும் பாரதம்; வெல்லும் இண்டியா’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு ஊடக உத்திகளை வகுப்பது, தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது.’
இத்துடன் மற்றுமொரு முக்கிய முடிவாக, 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“பாஜக ஆட்சியின் முடிவுக்கு கவுன்ட்டவுன் ஆரம்பம் ஆகிவிட்டது”: "அரசியல் எதிரிகளை எல்லாம் அச்சுறுத்துகிற ஏவல் அமைப்புகளாக அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவற்றை பாஜக ஆட்சி பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பொய்களையும் அவதூறுகளையும் வெறுப்பையும் முதலீடாக வைத்து பாஜக நடத்திவரும் பாசிச ஆட்சியின் முடிவுக்கு 'கவுன்ட்டவுன்' ஆரம்பமாகி உள்ளது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முன்னதாக, "இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது என்ற ஒற்றை இலக்கின் முன்பு, நிச்சயமாக பாஜக தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை" என்று இண்டியா கூட்டணியின் இரண்டாம் நாள் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் - ஆராய குழு அமைத்தது மத்திய அரசு: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ விவகாரத்தை ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆய்வுக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்திருப்பது பிரதமர் நரேந்திர மோடியின் மிக முக்கிய முடிவு என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். இதேபோல், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் வரவேற்றுள்ளார்.
மரபு மீறிய செயல்: காங்கிரஸ் விமர்சனம்: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு மேற்கொள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்தது மரபு மீறிய தவறான செயல் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரமோத் திவாரி, “முன்னாள் குடியரசு தலைவர் ஒருவரை ஒரு கமிட்டியின் தலைவராக அரசு நியமிப்பதை இப்போதுதான் நான் முதன்முறையாகப் பார்க்கிறேன்.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை குடியரசுத் தலைவரைக் கொண்டு திறக்காமல், பிரதமரைக் கொண்டு திறந்ததன் மூலம், குடியரசுத் தலைவர் பதவிக்கு இருக்கும் கண்ணியத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர். தற்போது முன்னாள் குடியரசுத் தலைவர் ஒருவரை ஒரு குழுவின் தலைவராக நியமித்து மரபை மீறியுள்ளனர். இதன் மூலம் தவறான பாரம்பரியத்தை உருவாக்கி இருக்கிறார்கள்” என கண்டித்துள்ளார்.
‘ஆளுங்கட்சி பிரமுகர்களால் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு’ - இபிஎஸ்: "தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் எந்தஒரு குற்ற நிகழ்விலும், ஏதாவது ஒரு ஆளும் கட்சிப் பிரமுகர் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மக்களிடையே அச்சமும், பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையும், முதல்வர் ஸ்டாலினின் திறமையின்மையால் ஏற்பட்டுள்ளது. இது, தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு: நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.158 குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி, வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தகக்கது.
9 மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு: தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு பரவலாக மழையும், சனிக்கிழமை 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கவுன்ட்டவுன் துவக்கம்: விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1: விண்வெளியில் இருந்தவாறு சூரியனை ஆய்வு செய்யவிருக்கும் ஆதித்யா-எல்1 விண்கலத்துக்கான கவுன்ட்டவுன் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. திட்டமிட்டபடி அது சனிக்கிழமை விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக முன்னேறிய தமிழக இளைஞர்: இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் ஆகியுள்ளார் தமிழகத்தை சேர்ந்த 17 வயது கிராண்ட் மாஸ்டர் குகேஷ். உலக அளவில் ஃபிடே ஓபன் தரவரிசையில் அவர் 8-ம் இடம் பிடித்துள்ளார். தனது ஆஸ்தான வழிகாட்டி விஸ்வநாதன் ஆனந்தை இதன் மூலம் அவர் முந்தியுள்ளார்.
புகுஷிமா நீர் அச்சத்தைப் போக்க ஜப்பான் பிரதமர் முயற்சி: ஜப்பான் கடல் உணவுகளை பல்வேறு நாடுகளும் இறக்குமதி செய்வதை நிறுத்திய நிலையில் சர்ச்சைக்குரிய புகுஷிமா கடல் பகுதியில் மீன் பிடித்ததோடு, அங்கு பிடித்து சமைக்கப்பட்ட உணவை உண்டு விழிப்புணர்வ ஏற்படுத்தியுள்ளார் ஜப்பான் பிரதமர் ஃபூமியோ கிஷிடா.
