புகுஷிமா நீர் அச்சத்தைப் போக்க மீன் உணவு சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்

புகுஷிமா நீர் அச்சத்தைப் போக்க மீன் உணவு சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்
Updated on
1 min read

டோக்கியோ: ஜப்பான் கடல் உணவுகளை பல்வேறு நாடுகளும் இறக்குமதி செய்வதை நிறுத்திய நிலையில் சர்ச்சைக்குரிய புகுஷிமா கடல் பகுதியில் மீன் பிடித்ததோடு, அங்கு பிடித்து சமைக்கப்பட்ட உணவை உண்டு விழிப்புணர்வ ஏற்படுத்தியுள்ளார் ஜப்பான் பிரதமர் ஃபூமியோ கிஷிடா.

ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை அந்நாட்டு அரசு சமீபத்தில் பசிபிக் பெருங்கடலில் வெளியேற்றியது. இதற்கு பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. புகுஷிமா அணு உலையை சுற்றியுள்ள கடல்நீரில் கதிர்வீச்சு அபாயம் இருப்பதாகக் கூறி ஜப்பான் கடல் உணவுகளை சீனா, ஹாங்காங், தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகளும் புறக்கணித்தன.

இந்நிலையில், ஜப்பான் பிரதமர் ஃபூமியோ கிஷிடாவும் மற்ற அமைச்சர்களும் புகுச்ஜிமா கரையில் பிடித்து சமைக்கப்பட்ட மீனை உட்கொண்டனர். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ பகிரப்பட்டது. முன்னதாக சுத்திகரிக்கப்பட்ட நீர் வெளியேற்றப்பட்ட கடல் பகுதியில் அவர்கள் மீன் பிடிக்க முயற்சி செய்வதும் இடம்பெற்றிருந்தது.

அதில் ஜப்பான் பிரதமர் கிஷிடா பேசுகையில், “சன்ரிகு, ஜோபன் பகுதிகள் கடல் உணவுகளை ஆதரிப்போம். இவாடே, மியாகி, புகுஷிமா, இபராகி கடல் பகுதிகளில் அற்புதமான கடல் உணவுகள் கிடைக்கின்றன” என்று கூறியுள்ளதோடு புகுஷிமா அணு உலையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீர் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாட்டில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மிகப் பெரிய சுனாமி அலைகளால் புகுஷிமா அணு உலைக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் அணு உலையின் மின் மற்றும் குளிரூட்டும் அமைப்புகள் சேதமடைந்தன. இந்த பாதிப்பை சரிசெய்ய குளிரூட்டும் அமைப்புக்குள் கோடிக்கணக்கான லிட்டர் கடல்நீர் மற்றும் போரிக் அமிலம் செலுத்தப்பட்டது. இதனால் ஏற்பட்ட கதிரியக்க கழிவு நீர் ஆயிரக்கணக்கான தொட்டிகளில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேமிக்கப்பட்ட அந்த கழிவு நீரைத்தான் கடும் எதிர்ப்புகளை மீறி தற்போது ஜப்பான் அரசு கடலில் வெளியேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in