

“பெரும் பணக்காரர்களுக்கானது மோடி அரசு” - ராகுல் காந்தி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெரும் பணக்காரர்களுக்காகவே செயல்படுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் கர்நாடக அரசின் கிரஹ லக்ஷ்மி திட்டம் மைசூருவில் புதன்கிழமை தொடங்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்தார். கிரஹ லக்ஷ்மி திட்டத்தின் மூலம் கர்நாடகாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள 1.28 கோடி பெண்கள் மாதம் ரூ.2 ஆயிரம் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கர்நாடகா வந்த ராகுல் காந்தி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்திய நிலப் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது என்றும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி கூறுவது உண்மையல்ல என்றும் தெரிவித்தார்.
‘தேர்தலுக்கான அறிகுறி’ - ப.சிதம்பரம் கருத்து: தேர்தல் வர இருப்பதால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டிருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தேர்தல் வருகிறது என்பதற்கு என்ன அறிகுறி? சமையல் காஸ் விலையை ரூ.200 குறைத்திருப்பதே அறிகுறி! ரூ1,100 க்கு மேல் விலை வைத்து மக்களைக் கசக்கிப் பிழிந்த அரசு திடீரென்று விழித்துக் கொள்கிறது பாரீர்! வெள்ளித்திரையில் விரைவில் காண்க! பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு!" என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, "நாடு முழுவதும் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ளது. ஐந்து மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையை மனதில் கொண்டு இந்த முடிவை அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தில் எடுத்துள்ளது" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
“7.5% இட ஒதுக்கீட்டில் கூடுதல் கட்டணம் கேட்பதா?”: "அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவம், பொறியியல், கால்நடை அறிவியல், வேளாண்மை உள்ளிட்ட படிப்புகளில் சேரும் மாணவர்களிடம் கூடுதலாக கட்டணம் செலுத்தும்படி சில தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்துகின்றன. இது நியாயப்படுத்த முடியாத அநீதியாகும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
குஜராத்தில் கோடீஸ்வரர் 49% அதிகரிப்பு: குஜராத்தில் ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவோர் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 49% அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் புள்ளி விவரத்தில், கடந்த 2021-22 மதிப்பீட்டு ஆண்டில் குஜராத்தைச் சேர்ந்த 9,300 பேர் ரூ.1 கோடி அல்லது அதற்கு மேல் வருவாய் ஈட்டியதாக தங்கள் வருமான வரி தாக்கல் படிவத்தில் தெரிவித்திருந்தனர். இது 2022-23 மதிப்பீட்டு ஆண்டில் 49% அதிகரித்துள்ளது. அதாவது கூடுதலாக 4,500 பேர் ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியதாக தெரிவித்திருந்தனர். கடந்த 5 ஆண்டுக்கு முன்பு 7 ஆயிரமாக இருந்த இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது.
இதுபோல கார்ப்பரேட் நிறுவன பிரிவில் புதிதாக சுமார் ஆயிரம் கோடீஸ்வரர்கள் உருவாகி உள்ளனர். அதாவது 2021-22-ல் 3,700 ஆக இருந்த இந்த எண்ணிக்கை 2022-23-ல் 4,700 ஆக அதிகரித்துள்ளது. இது 28% உயர்வு ஆகும். குஜராத்தில் 2021-22-ல் வரி செலுத்திய தனிநபர்கள் எண்ணிக்கை 71.2 லட்சமாக இருந்தது. இது அடுத்த ஆண்டில் 4% அதிகரித்து 73.8 லட்சமானது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி மேல்முறையீடு: சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுக்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
‘எம்ஜிஆர் சத்துணவுத் திட்ட பெயர் பலகை மறைப்பு’: “சென்னையில் மட்டும் 1600-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில் 358 மையங்களில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டம் என்பதை முழுமையாக மறைத்துவிட்டு, காலை உணவுத் திட்டம் என்று எழுதுகின்றனர்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரக்ஞானந்தாவுக்கு ஊக்கத்தொகை வழங்கி முதல்வர் வாழ்த்து:இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரும், உலக கோப்பை செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தவருமான பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத் தொகை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அஜர்பைஜானில் இருந்து புதன்கிழமை தமிழகம் திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மும்பையில் ‘இண்டியா’ கூட்டணி ஆலோசனை: 26 எதிர்க்கட்சிகள் ‘இண்டியா’ கூட்டணியின் மூன்றாவது கூட்டம் வியாழக்கிழமை மும்பையில் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவது முக்கிய அங்கம் வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, தேர்தலுக்கு முன்பாக கட்சிகளுக்குள் இருக்கும் பிரச்சினைகள் குறித்தும், ஒருங்கிணைப்புக் குழுவின் தேவைகள் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இக்கூட்டத்துக்குப் பின்னர் ‘இண்டியா’ கூட்டணியின் லோகோ வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோடநாடு கொலை, கொள்ள வழக்கு - இபிஎஸ் கருத்து:கோடநாடு கொலை, கொள்ள வழக்கை தமிழக அரசு சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
காவிரியில் 5,000 கனஅடி தண்ணீரை திறந்த கர்நாடகா: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு இணங்க, தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது.