Published : 30 Aug 2023 12:00 PM
Last Updated : 30 Aug 2023 12:00 PM
சென்னை: இந்தியாவின் கிராண்ட்மாஸ்டரும், உலக கோப்பை செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தவருமான பிரக்ஞானந்தா இன்று தமிழகம் திரும்பினார். சென்னை விமானநிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலகக் கோப்பை செஸ் போட்டித் தொடரில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்ற பிரக்ஞானந்தா இன்று (புதன்கிழமை) தமிழகம் திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இங்கு நிறைய பேர் வந்திருப்பதைப் பார்த்து மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் உற்சாகமாக உணருகிறேன். இது செஸ்ஸூக்கு நல்லது என்று நான் நினைக்கிறேன்" என்றார். சென்னை திரும்பிய பிரக்ஞானதாவை அவரது பள்ளித்தோழர்கள், அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மாநில அரசு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் விமானநிலையம் சென்று வரவேற்றனர்.
பிரக்ஞானந்தா வீடுதிரும்பியது குறித்து அவரது சகோதரி கூறுகையில், "பத்து ஆண்டுகளுக்கு முன்பு விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியன் பட்டம் பெற்று திரும்பிய போது இதே போன்ற ஒன்றை நான் பார்த்தேன். அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாங்கள் எல்லோரும் அவரை வரவேற்க விமானநிலையம் சென்றிருந்தோம். பிரக்கியும் (பிரக்ஞானந்தா) அனைத்து மக்களிடமிருந்தும் அதே அன்பைப் பெறுவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன், 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா மோதினார். இதில் இரு கிளாசிக்கல் ஆட்டங்களும் டிராவில் முடிவடைந்தன. இறுதி சுற்றின் முதல் ஆட்டம் சுமார் 4 மணி நேரம் நீடித்த நிலையில் 35-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்திருந்தது. இதன் பின்னர் 2-வது ஆட்டம் 30-வது காய் நகர்த்தலின் போது டிரா ஆனது. இதனால் இருவரும் தலா ஒரு புள்ளியை பெற்றிருந்த நிலையில் வெற்றியாளர் யார்? என்பதை தீர்மானிப்பதற்கான டைபிரேக்கர் ஆட்டம் நடைபெற்றது. அதில் இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்செனிடம் தோல்வி கண்டார். இதன்மூலம் இறுதி போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT