ஓய்வுபெற்ற பின் ஒழுங்கு நடவடிக்கையை தொடர முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஓய்வுபெற்ற பின் ஒழுங்கு நடவடிக்கையை தொடர முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
2 min read

பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஒருவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை தொடர முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தேவ் பிரகாஷ் திவாரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில் கூறியிருந்ததாவது:

உத்தரப் பிரதேச மாநில கூட்டுறவுத் துறையில் உதவிப் பொறியாளராக பணியாற்றினேன். என் மீது கூட்டுறவுத் துறை பணியாளர் சட்டம், 1975 பிரிவு 85-ன் கீழ் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது. என்னை 88-ம் ஆண்டு பணி நீக்கம் செய்தனர். துறை விசாரணையில் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்கப்படவில்லை.

இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். ஒழுங்கு நடவடிக்கையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால், 2006-ம் ஆண்டு மீண்டும் பணியமர்த்தப்பட்டேன். மீண்டும் புதிதாக என் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடரப்பட்டது. இரண்டு பேர் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.

விசாரணை நிலுவையில் இருந்த நிலையில், 31.3.2009-ம் தேதி நான் பணியில் இருந்து ஓய்வு பெற்றேன். ஓய்வுக்குப் பின்பும் என் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை தொடரப்பட்டது. ஓய்வுகால பலன்கள் மற்றும் சம்பள நிலுவைத் தொகையும் வழங்கப்படவில்லை.

இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையில் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி உயர் நீதிமன்றம் எனது மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து என் மீதான விசாரணையை ரத்து செய்ய வேண்டும். ஓய்வுகால பலன்களையும் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘பணியிலிருந்தபோது ஒழுங்கு நடவடிக்கை தொடங்கி மூன்று ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், ஓய்வு பெற்றபின் ஒழுங்கு நடவடிக்கையை தொடர சட்டத்தில் இடமில்லை’’ என்று வாதிட்டார்.

கூட்டுறவுத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘ஓய்வுபெற்று விட்டதால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது. துறையின் உரிமையில் தலையிட முடியாது’’ என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாகூர், சி.நாகப்பன் அடங்கிய அமர்வு அளித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

உத்தரப் பிரதேச கூட்டுறவுத் துறை பணியாளர் பணி விதிகளில் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை ஓய்வு பெற்ற பின்பும் தொடரலாம் என்பதற்கான எந்தப் பிரிவும் இல்லை. அப்படி இல்லாத நிலையில் விசாரணையை தொடர முடியாது. அவர் ஓய்வு பெற்றதுடன் ஒழுங்கு நடவடிக்கை விசாரணையும் காலாவதியாகி விடுகிறது. எனவே, ஓய்வுபெற்ற பின் விசாரணையை தொடர முடியாது. இதுதொடர்பான உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவருக்கு உரிய சம்பள நிலுவைத் தொகை, ஓய்வுகால பலன்களை உடனே வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in