

நிலவில் தென்துருவத்தில் கால்பதித்தது இந்தியா: நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைத் தொடர்ந்து நிலவில் கால்பதித்துள்ள இந்தியா, தனது விண்வெளி பயணத்தில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. சந்திரயான்-3 நிலவினை அடைந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் வெற்றியை தெரிவித்த இஸ்ரோ தலைவர் "இந்தியா நிலவில் உள்ளது" என்று அறிவித்தார்.
இந்நிலையில், விக்ரம் லேண்டர் நிலவில் இறக்கப்பட்ட நிகழ்வில் தென்னாப்பிரிக்காவில் இருந்து காணொலி மூலம் இணைந்த பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியா நிலவில் கால் பதித்ததைத் தொடர்ந்து விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து இந்தியாவின் அடுத்த இலக்கு நிலவுக்கு மனிதனை அனுப்புவதே" என்றார்.
இதனிடையே "சந்திரயான் - 3 வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டதற்காக இஸ்ரோவுக்கு எனது பாராட்டுகள். நிலவுப் பரப்பில் தடம் பதிக்கும் நான்காவது நாடாக இந்தியாவை நிலைநிறுத்தியுள்ள வரலாற்றுச் சாதனை இது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நேரலையில் ஒளிபரப்பிய இஸ்ரோ: நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கியதை இந்திய விண்வெளி ஆராயச்சி நிறுவனமான இஸ்ரோ நேரலையில் ஒளிபரப்பியது. இதனிடையே சந்திரயான்-3 லேண்டர் பத்திரமாக தரையிறங்கவும், இஸ்ரோவின் இந்த முயற்சி வெற்றி பெறவும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. டெல்லியில் உள்ள குருத்வாராவில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
அதேபோல் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள மசூதி ஒன்றில் சந்திரயான்-3ன் வெற்றிக்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. ஏராளமான இஸ்லாமியர்கள் இந்த பிரார்த்தனையில் ஈடுபட்டனர். நாட்டின் பல்வேறு இடங்களிலும் கோயில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.
படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம்: இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் 33 படகுகளுக்கு ரூ.1.23 கோடி நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
“வேற்றுமை இல்லாத தமிழகத்தை நோக்கி வழிநடத்துங்கள்”: "தமிழகத்துக்கு என்று தனிக்குணம் உண்டு. சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு என்ற பண்பட்ட உணர்வுகளைக் கொண்ட நம் தமிழகத்தின் உணர்வை, மாணவர்கள் அனைவரும் பெற வேண்டும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு: 2006-11 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கில் இருவரும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
திமுகவினரின் ஜாமீன் மனு தள்ளுபடி: வருமான வரி அதிகாரிகளை தாக்கிய வழக்கில் கரூர் திமுகவினரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: இபிஎஸ் கண்டனம்: "ஜெயலலிதாவால் துவக்கப்பட்ட தமிழக காவல் துறையின் ஒரு சிறப்புப் பிரிவாக கடலோர பாதுகாப்புக் குழுமம், எங்களது அரசில் பல காலம் சிறப்பாக செயல்பட்டது. இந்த அரசின் நிர்வாகச் சீர்கேட்டால் அந்தக் கடலோர பாதுகாப்புக் குழுமம் எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை", என்று தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மிசோரத்தில் ரயில்வே மேம்பாலம் இடிந்து 22 பேர் பலி: மிசோரம் மாநில தலைநகர் அய்ஸ்வாலில் இருந்து 21 கி.மீ., தொலைவில் உள்ள சாய்ராங் என்னும் இடத்தில் கட்டப்பட்டுவரும் ரயில்வே மேம்பாலம், புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு பணியின்போது இடிந்து விழுந்தது. இதில் 22 பேர் உயிரிழந்தனர்.
சந்திரயானைப் புகழ்ந்த பாக் முன்னாள் அமைச்சர்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவை இகழ்ந்த முன்னாள் பாகிஸ்தான் அமைச்சர் சவுத்ரி ஃபவாத் ஹுசைன், தற்போது சந்திரயான்-3 மிஷனை மனதாரப் பாராட்டியுள்ளார். அவர் “சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கும் நிகழ்வை பாகிஸ்தான் நாட்டு ஊடகங்கள் நேரலையில் ஒலிபரப்பு செய்ய வேண்டும். மனித குலத்திற்கு வரலாற்று சிறப்பு மிக்க தருணமாக இது இருக்கும். குறிப்பாக மக்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு. அவர்களுக்கு எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்திருந்தார்.
உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டி 2-வது ஆட்டமும் டிரா: நடப்பு உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் ஓபன் பிரிவில் கார்ல்சன் மற்றும் பிரக்ஞானந்தா இடையிலான இரண்டாவது சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்துள்ளது. மொத்தம், இரண்டு சுற்றுகளை உள்ளடக்கியது இந்த போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியின் முதல் சுற்று ஆட்டம் டிரா ஆனது. இதனால் டை பிரேக்கர் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். இந்த ஆட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.