சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: 2006-11 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கில் இருவரும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசுவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனும் பதவி வகித்தனர். இந்த காலக் கட்டத்தில், இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இரண்டு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அவரது மனைவி உட்பட மூவர் மீது ரூ.44.56 லட்சம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தன. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் மற்றும் அவரது மனைவி உட்பட மூவரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவுகளை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யத நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்தார்.
இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், "இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிகாரங்களைக் கேட்காமல், ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால், அது அத்துறையின் அதிகாரங்களை களங்கப்படுத்திய செயலாகிவிடும். இந்த வழக்கு விசாரணை நடைமுறையில் எந்த தவறும் இல்லை" என்று தெரிவித்தார்.
அப்போது நீதிபதி, இந்த வழக்கில் பதிலளிக்க மட்டுமே உத்தரவிடப்படுகிறது. எந்தவொரு இறுதி உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. 2021ம் ஆண்டு இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி அமைச்சர்கள் தாக்கல் செய்த மனுவுக்கு கடுமையான ஆட்சேபம் தெரிவித்த புலன் விசாரணை அதிகாரி, ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு மேல் விசாரணை கோரி மனுதாக்கல் செய்திருக்கிறார். எனவே, இந்த விசாரணையில் தவறான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது தெரியவருகிறது.
அதேபோல், இரண்டு அமைச்சர்களையும் விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு ஒரே மாதிரியாக உள்ளன. இதுபோன்ற தவறான நடைமுறையை அனுமதிக்க முடியாது. நீதிமன்றம் கண் மூடிக் கொண்டிருந்தால், நீதிமன்றம் கடமையை செய்யத் தவறிவிட்டது போலாகிவிடும். நீதிமன்றம் ஒரு குறிப்பிட்டக் கட்சிக்கோ, அரசுக்கோ உரித்தானது அல்ல. நாட்டில் வாழும் குப்பனுக்கும் சுப்பனுக்கும் உரித்தானது.
தாமாக முன்வந்து எடுத்துள்ள இந்த வழக்கை குறிப்பிட்ட நபர்களுக்கு எதிரானதாக பார்க்கவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 2021க்குப் பிறகு தங்களது நிலைப்பாட்டை மாற்றியுள்ளதை காண முடிகிறது. அதிகாரத்துக்கு யார் வந்தாலும் அந்த அதிகாரத்தை நீர்த்துப்போகவேச் செய்கிறார்கள். சிறப்பு நீதிமன்றங்களில் வழக்குகள் நடத்தப்படும் விதம் உண்மையாகவே அதிர்ச்சியளிக்கிறது. இந்த வழக்கில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ.எஸ்.ஆர்.ராமசந்திரன் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 20-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
